மோக்கா புயல்: தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Published On:

| By Monisha

mocha cyclone tamilnadu

வங்கக்கடலில் மோக்கா புயல் தீவிரமடைந்துள்ளதால் கடலுக்கு சென்றுள்ள படகுகள் விரைவில் கரைக்கு திரும்ப வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (மே 11) அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று (மே 11) காலை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை கடந்து மே 13 ஆம் தேதி சற்று வலுவிழந்து மே 14 அன்று 120 – 145 கி.மீ. / மணி வேகத்துடன் வங்க தேசம் மற்றும் மியான்மர் இவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத் துறை ஆணையர் அவர்களுக்கும், கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை பெருநகர ஆணையர் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

விளக்கமான அறிவுரைகள்

மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் மே 14 வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

இரு உயிர்களை காப்பாற்றிய ஐபிஎஸ் அதிகாரி! 

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்துக்கு வரும் இம்ரான்: தொடரும் பதற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel