நாங்குநேரி சம்பவம்… சட்டம் தன் கடமையைச் செய்யும்: ஸ்டாலின் உறுதி!

Published On:

| By christopher

nanguneri murder attempt case

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் சக மாணவர் மற்றும் அவரது தங்கையை ஆறு மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் இன்று (ஆகஸ்ட் 11) கைது செய்துள்ள போலீசார்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாங்குநேரி சம்பவத்தில் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.

அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் வேண்டுகோள்!

முன்னதாக நாங்குநேரி சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்று (ஆகஸ்ட் 11) தனது சமுகவலைதள பக்கத்தில் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், ”மாணவர்களே இந்த ஆண்டு என்ன ஆண்டு என்று உங்களுக்கு தெரியுமா? சாதி தீண்டாமைக்கு எதிராக நடந்த  வைக்கம் போராட்டம் 100 ஆண்டுகளை கடந்த ஆண்டு. இந்த ஆண்டில் மாணவர்களுக்கு வைக்கம் போராட்டம் குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும். பெரியார் எதெற்கெல்லாம் குரல் கொடுத்தார் என்பதையெல்லாம் எடுத்துரைக்க வேண்டும்  என முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில் மாணவர்களே மிகப்பெரிய ஆளுமைகளெல்லாம் மனித நேயம் என்றால் என்ன என்பது குறித்து பல்வேறு விதங்களில் நமக்கு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் கொரோனா என்ற கொடூர நோய் தாக்கிய இரண்டு ஆண்டுகளில் தான் அதெல்லாம் புத்திக்கே ஏறாமல் இருந்த மனிதருக்கும் அது புரிந்தது.

கல்வி சார்ந்து அனைவரும் பாராட்டும் வகையில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போது, 2 நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வு அது எங்கு நடந்தது எனக் கூற விரும்பவில்லை. என்றாலும் இதுபோன்ற ஒரு சம்பவம் இனி ஒருபோதும் நடக்காதவாறு நீங்கள் பார்த்துகொள்ள வேண்டும்.

பள்ளிக்கூடத்திற்கு நீங்கள் போகும் போது உங்களது புத்தியை கூர்மையாக்க நாங்கள் ஆசைபடுகிறோம். உங்களை கூர்நோக்கும் இல்லத்தில் சேர்க்க நாங்கள் ஆசைப்படவில்லை.

நாங்கள் மாணவர்களை அறிவு சார்ந்து வளர்க்க நினைக்கும் போது, உங்களிடையே வேற்றுமையை விதைக்கும் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவரது சகோதரி இருவருக்கும் பாதுகாப்பான கல்வியை நான் வழங்குவேன்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இது என்னுடைய கடமை. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவ மானவிகளும் அனைவரையும் தங்களது சகோதரர்களாகவும், நண்பர்களாகவும் பார்க்க வேண்டும் என்று உங்கள் அண்ணனாக நான் கேட்டுக்கொள்கிறேன். இதுதான் புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு உறுதிமொழியாக இருக்கும்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

மோடியின் பேச்சு பிரதமர் பதவிக்கு அழகல்ல: ராகுல்காந்தி

குட்கா முறைகேடு: 8 பேருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share