எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.400 கோடி முதலீட்டில் புதிய காலணி உற்பத்தித் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 28) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அளவில் தமிழ்நாடு பல பொருளாதாரக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இப்பெருமை நிலைபெறவும், பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
காலணிகளைப் பொறுத்தவரை, உலக அளவில் தோல் அல்லாத காலணிகளின் நுகர்வும், விளையாட்டு வீரர்களின் காலணிகளுக்கான நுகர்வும் அதிக அளவில் உள்ளன. மேலும், இத்துறையில் அதிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளும், ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகளும் உள்ளன. இவை மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் இத்துறை திகழ்கிறது.
இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இதில் பெரும் அளவில் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், கடந்த ஆண்டு செப்டம்பர் 23 அன்று “தமிழ்நாடு காலணி மற்றும் தோல்பொருட்கள் கொள்கை-2022″ -ஐ தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்
அனைவரையும் உள்ளடக்கிய பரவலான மற்றும் நிலையான வளர்ச்சி” என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் சிப்காட் நிறுவனம் மூலமாக ஒரு தொழிற் பூங்காவை அமைத்துள்ளது.
இப்பூங்காவில் இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதன் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் மேம்படும்.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலை அமைக்க கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், மிகச் சரியாக ஓர் ஆண்டு காலத்தில் இத்தொழிற்சாலை நிறுவப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, எம்.பி.க்கள் ஆ.ராசா, தொல். திருமாவளவன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”உத்தரகாண்ட் மீட்பு பணி உத்வேகம் அளிக்கிறது!”: பிரதமர் மோடி
சட்டமும் மருத்துவமும் சந்திக்கும் புள்ளிதான் செந்தில்பாலாஜி கேஸ்: அப்டேட் குமாரு