மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் இன்று(அக்டோபர் 4) நிறைவு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் உயரதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
அதில் இரண்டாவது மற்றும் கடைசி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அவர், “காலை உணவுத் திட்டத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடத்திட வேண்டும்.
மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நீங்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் முதல்வர் வெளியிட்டார்.
அதன்படி, அரசுப் பள்ளி விடுதி மாணவ, மாணவியருக்கான உணவு தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,400-ஆக உயர்த்தப்படும். அரசுக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 1,100 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மறுவாழ்வு பெறுபவர்களுக்கான உதவித்தொகை ₹30,000-ல் இருந்து ₹50,000 ஆக உயர்த்தப்படும்.
காணொலியில் விசாரணை கைதிகளை ஆஜர்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இணைப்பு சாலைகளை அமைக்க வழிக்காட்டு குழு அமைக்கப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், சிறந்த மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மனித வள மேலாண்மை துறை சார்பில் 2022ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…