கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு ’கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 4) வழங்கி கெளரவித்தார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான ஜூன் திங்கள் 3-ஆம் நாளான்று வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவின் பரிந்துரையின்படி 2022-ஆம் ஆண்டிற்கான “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது, சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ்பெற்ற ஆரூர்தாஸுக்கு கடந்த 3-6-2022 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து, கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன் பெண்மையைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிட முதலமைச்சர் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார்.
அதன்படி, திரையுலகில் 20.000-க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும்., “தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும். “மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கும்,
தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும், 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என்று கடந்த மாதம் 24ஆம் தேதி அறிவித்தார்.
அதன்படி, இருவருக்கும் தலைமை செயலகத்தில் 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன் தலா 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.
அப்போது உடல்நலக்குறைவு காரணமாக நாற்காலியில் அமர்ந்தபடியே விருதைப் பெற்றுக்கொண்ட பி.சுசீலா தமிழ்த்தாய் வாழ்த்தை சிரித்தபடியே பாடினார்.
அதனை ரசித்து கேட்ட ஸ்டாலின், பின்னர் அவரும் பி.சுசீலாவுடன் சேர்ந்து பாடினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சனாதனம் : பவன் கல்யாணின் எச்சரிக்கை… உதயநிதி பதில்!
திருப்பதி லட்டு விவகாரம் : ’சிறப்பு புலனாய்வுக் குழு’ அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!