“சாப்பாடு எப்படி இருக்கு?” அம்மா உணவகத்தில் ஸ்டாலின்

Published On:

| By Selvam

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 19) ஆய்வு செய்தார்.

சென்னையில் மட்டும் 392 அம்மா உணவகங்கள் உள்ளன. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த உணவகங்களில் குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில், “திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அம்மா உணவகங்களை மூட முடிவெடுத்துள்ளது. தரமான உணவுகள் வழங்கப்படவில்லை, கட்டட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

 

இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்றுகொண்டிருந்தார். அப்போது தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் திடீரென்று விசிட் அடித்தார். அங்குள்ள சமையல் செய்யும் அறைக்கு சென்ற ஸ்டாலின், ஊழியர்களுடன் உரையாடினார்.

“ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு சமையல் செய்கிறீர்கள்? மக்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று கேட்டார். உணவு தயார் செய்யும் முறை, வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது குறித்து ஸ்டாலினிடம் ஊழியர்கள் விளக்கினர்.

உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “உணவு தரமாக இருக்கிறதா? என்னென்ன உணவு சமைக்கிறார்கள்? வேறு ஏதேனும் குறை இருக்கிறதா?” என்று கேட்டறிந்தார்.

தொடர்ந்து  “உணவு தரத்தில் எந்த குறையும் இருக்கக்கூடாது. வாடிக்கையாளர்களை கனிவுடன் கவனிக்க வேண்டும்” என்று அம்மா உணவக ஊழியர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கினார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஓடிடியில் தூள் கிளப்பும் ‘மகாரஜா’

புதிய கிரிமினல் சட்டங்களில் குழப்பம்: மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel