அடாத மழையிலும் விடாது பணி: மு.க.ஸ்டாலின்
சென்னை வேளச்சேரி பகுதிகளில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியதால், நேற்றும் இன்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த வாரம் கன மழை பெய்தவுடன் நகரின் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மழை நீரை அகற்றினர்.
இந்தநிலையில், நேற்று திண்டுக்கல் காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளச்சேரி பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே.
சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை. தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே.
அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான், வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன்.
இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது. என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
இந்திய ஒற்றுமை பயணம்: அரசியலை விட ஆழமானது-ஆதித்ய தாக்கரே