மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 17) தொடங்கி வைத்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியது. குடியிருப்புகளை சூழந்த வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதனிடையே வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
சென்னையில் உள்ள அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
நிவாரணத் தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்து, அதற்காக டோக்கன்களும் வழங்கப்பட்டன. குடும்ப அட்டை இல்லாதவர்கள் நியாய விலைக்கடைகளில் அதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ள நிவாரணத் தொகை ரூ.6,000 வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று வேளச்சேரியில் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நாளை முதல் நியாய விலைக் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.
உதவி எண்கள்
நிவாரணத் தொகை தொடர்பான பொதுமக்களின் புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகாரிகளிடம் உடனுக்குடன் கொண்டு சேர்க்க சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அலுவலகத்தில் இன்று முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்பட உள்ளது.
பொதுமக்கள் நிவாரணத் தொகை தொடர்பான சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்வதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள், 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
’கன்னத்தில் விழுந்த பளார் அறை’: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!
எண்ணூர் எண்ணெய் கசிவு: கமல் நேரில் ஆய்வு!