சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியிடம், முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக இன்று (நவம்பர் 13) நலம் விசாரித்தார்.
சென்னை கிண்டி அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நுரையீரல் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் இன்று கத்தியால் குத்தினார். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு கிண்டி மருத்துவமனையிலேயே உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடனடியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
பின்னர், இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ சங்கத்தினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, வேலைநிறுத்த போராட்டத்தை மருத்துவ சங்கத்தினர் வாபஸ் பெற்றதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, கிண்டி மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் சென்று பாலாஜியின் உடல் நலன் குறித்து விசாரித்தார். அப்போது அமைச்சர் செல்போன் மூலமாக முதல்வர் ஸ்டாலின் பாலாஜியிடம் நலன் விசாரித்தார். “உங்களுக்கு ஒன்னும் ஆகாது. நாங்க உங்களோட இருக்கோம். விரைவில் குணமாயிருவீங்க” என்று பாலாஜிக்கு நம்பிக்கை கொடுத்தார் ஸ்டாலின்.
பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகையா? – கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்!
மருத்துவர் பாலாஜிக்கு கத்திக்குத்து: “டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்” – மா.சுப்பிரமணியன்