அடுத்த 2 ஆண்டில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Monisha

mk stalin speech today

பல்வேறு அரசு பணிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது.

இந்த விழாவில் குரூப் 4 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி பேசிய முதல்வர் ஸ்டாலின்,

“நமது அரசாங்க இயந்திரத்தை திறம்பட செயல்படுத்த தகுதியான அரசு அலுவலர்கள் தெரிவு செய்வதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகிய முகமைகள் இந்த வேலையை சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற போட்டித் தேர்வுகளுக்கு இலட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிக்கிறார்கள். அதனால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதைச் சரிசெய்ய, விடைத்தாள்களை மதிப்பீடு செய்கின்ற முறையை எளிதாக்கவும், கால தாமதத்தை தவிர்க்கவும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 95 இலட்சம் ரூபாய் செலவில், ஆன்-ஸ்கிரீன் எவாலுவேஷன் லேப் என்ற உயர் தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

அதே போல, ஆசிரியர் பணிகளுக்கான தெரிவுகள் வெளிப்படையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க, நமது அரசு 20-9-2021 அன்று குழு ஒன்று அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டது.

அந்தக் குழுவினுடைய பரிந்துரை அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தை மறுசீரமைப்பு செய்து 3-1-2023 அன்று ஆணைகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி 74 புதிய பணியிடங்கள் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தொழில்நுட்ப பிரிவு, கணக்குப்பிரிவு, நிர்வாகப் பிரிவு, அறிவிக்கைப் பிரிவு, சட்டப்பிரிவு, தகவல் உரிமைச் சட்டப்பிரிவு, குறைதீர்க்கும் பிரிவு ஆகிய பிரிவுகள் எல்லாம் நிரப்பப்பட்டிருக்கிறது.

கலைஞர் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்பட்டது.

கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பயன்பெறவேண்டும் என்று தமிழ் கட்டாயத் தகுதித் தேர்வு தாளை அறிமுகப்படுத்தி, அது இப்போது நடைமுறையில் இருக்கிறது.

தமிழ்நாட்டுல இருக்கின்ற பல்வேறு ஒன்றிய அரசுத் துறைகளான இரயில்வே அஞ்சல் துறை வங்கிகள் – ஆகியவற்றில் இருக்கக்கூடிய காலிப் பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து நாம் வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். இது தொடர்பாக மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு 12.10.2021 அன்று கடிதமும் எழுதியிருக்கிறேன்.

அது மட்டுமில்லாமல், ஒன்றிய அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் தமிழ் மொழியிலும் நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். 26.12.2022 அன்று இதை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறேன். என்னுடைய இந்தக் கோரிக்கையை ஏற்று, ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் வாயிலாக, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தரத்தில், பன்முகப் பணியாளர் (மல்ட்டி- டாஸ்கிங்- ஸ்டாப்ஸ்) பதவிக்காக நடத்தப்படுகின்ற தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது.

என்னோட கனவுத் திட்டமான ‘நான் முதல்வன் திட்டம்’ பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். கடந்த ஆண்டு மட்டும் 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது.

இது நிர்ணயித்த இலக்கான பத்து லட்சத்தை தாண்டி, பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

தனியார் நிறுவனங்களில் பல ஆயிரங்கள் ரூபாய் செலவு செய்து பெற வேண்டிய பயிற்சியை நம்முடைய இளைஞர்களுக்கு இலவசமாக இப்போது வழங்கிக் கொண்டு வருகிறோம்.

ஒன்றிய அரசால் நடத்தப்படுகின்ற போட்டித் தேர்வுகளிலும், நம்முடைய மாணவர்கள் அதிகமாக தேர்வாகவேண்டும் என்று S.S.C, R.R.B, வங்கிப் பணி போன்றவற்றிற்காக 5000 பேருக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை நான் முதல்வன் திட்டத்தில் நாம் நடத்திக் கொண்டு வருகிறோம்.

7.03.2023 அன்று இது துவக்கி வைக்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற 90 நபர்கள், ஒருங்கிணைந்த வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதனிலைத் தேர்வில் தேர்வாகியிருக்கிறார்கள்.

மண்டல ஊரக வங்கிகளில் எழுத்தர் பணிக்கான முதனிலைத் தேர்வில் 40 பேர் தேர்வாகியிருக்கிறார்கள்.

குடிமைப் பணித் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறவேண்டும் என்று முதனிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 1,000 பேருக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ஊக்கத்தொகையும், பயிற்சியும் வழங்குகின்ற புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து இது தொடங்கப்படும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, மாநில அரசுப் பணிகள் போலவே, ஒன்றிய அரசுப் பணிகளிலும் நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவில் தேர்வாக வேண்டும்.

நம்முடைய அரசு அமைந்த கடந்த இரண்டாண்டு காலத்தில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட இருக்கிறது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மோனிஷா

திருமாவளவனிடம் உடல் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி

பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்ட பள்ளம்: 2 சிறுமிகள் உயிரிழப்பு!