சென்னையில் உலகத் தரத்தில் மெகா ஜவுளி நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப ஜவுளிகளின் முக்கியத்துவம் மற்றும் மாநிலத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு, அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசின் ஜவுளித் துறை, ஒன்றிய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் இணைந்து கருத்தரங்கை நடத்துகிறது.
தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான மாநாட்டை இன்று (நவம்பர் 25) முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “துணிநூல் துறையின் சார்பில் முதன்முறையாக ஜவுளித்தொழில் குறித்தான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நம்முடைய போட்டி என்பது இந்திய மாநிலங்களோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு இணையானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது அரசின் முனைப்பான நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்குப் பன்னாட்டுத் தொழில் முனைவோர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் தமிழ்நாடு 2-ஆவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது.
4 பெரிய பன்னாட்டு விமான நிலையங்கள், 2 உள்நாட்டு விமான நிலையங்கள், 3 பெரிய துறைமுகங்கள், 19 சிறிய துறைமுகங்களைத் தமிழ்நாடு கொண்டிருக்கிறது.
2 இலட்சத்து 53 ஆயிரத்து 510 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைவழி வசதியைக் கொண்டு முதலீட்டாளர்களும், ஏற்றுமதியாளர்களும் மிகவும் விரும்பும் மாநிலமாக விளங்குகிறது.
தமிழ்நாடு 80 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது.
திறமை வாய்ந்த சிறந்த தொழில்நுட்ப பணியாளர்களையும் கொண்டுள்ளது.
இத்தகைய தனித்தன்மையின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் நாம் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இதில் ஜவுளித்துறையும் ஒன்றாக இருக்கிறது.
ஜவுளித் துறையைப் பொறுத்தவரை, நமது மாநிலம் அன்னிய முதலீட்டினை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியிலும் 3-ஆவது பெரிய இடத்தில் இருக்கிறது.
வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக ஜவுளித் தொழில் உள்ளது.
அதனால்தான் நமது அரசு பொறுப்பேற்றவுடன் புதியதாக ஜவுளித் துறை என்ற ஒன்றை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக, தொழில்நுட்ப ஜவுளித் தொழிலின் உலகளாவிய போக்கினை அறிந்து, பன்னாட்டுக் கருத்தரங்கினை இந்த அரசு நடத்துகிறது.
வளர்ந்து வரும் துறைகள் இனத்தில் தொழில்நுட்ப ஜவுளி சேர்க்கப்பட்டு ஜவுளித் தொழில் முனைவோர்களுக்குச் சிறப்பு முதலீட்டு மானிய உதவியாக ரூபாய் ஒரு கோடியே 50 இலட்சம் வழங்கப்படுகிறது.
ஜவுளித் தொழிலில் தமிழ்நாடு எப்போதுமே முன்னணி வகிக்கக்கூடிய மாநிலம். இந்தியாவினுடைய மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழ்நாடு மட்டுமே 12 விழுக்காடு பங்களிப்பை வழங்குகிறது.
ஜவுளித் தொழிலில் புதிய தொழில்நுட்ப உத்திகளைக் கடைப்பிடித்து உலக அளவில் தேவைப்படும் பல்வேறு துணிவகைகளையும் தமிழகம் உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் 1,861 நூற்பாலைகள் உள்ளன.
இது இந்திய நாட்டின் பங்கில் 55 விழுக்காடு! இங்கு 23 மில்லியன் நூற்பு கதிர்கள் செயல்பட்டு வருகின்றன. இது நாட்டின் நூற்பு கதிர்களின் எண்ணிக்கையில் 43 விழுக்காடு.
மேலும் இந்தியாவிலுள்ள விசைத்தறிகளில் 23 விழுக்காடு விசைத்தறிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 31 இலட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. எனவேதான், நாம் இந்தத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
தொழில்நுட்ப ஜவுளி என்பது வளர்ந்துவரும் மிக முக்கியமான ஒரு பிரிவு. இதற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையின் எதிர்காலமே தொழில்நுட்ப ஜவுளிகளின் வளர்ச்சியைச் சார்ந்திருப்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்.
- விளையாட்டுத் துறையினருக்கான துணிகள்
- நாட்டின் பாதுகாப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடைகள்
- தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கான தொழில்நுட்பம் சார்ந்த துணிகள்
- மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் உயிர் காக்கும் துணிகள்
- ஆட்டோமொபைல் துறையில் பயன்படுத்தப்படும் காற்றுப்பைகள், சீட் பெல்ட்கள்
போன்றவற்றைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில் உலகத் தரத்தின் மெகா ஜவுளி நகரம் உருவாக்கிட முயற்சிகள் எடுத்து வருகிறோம். மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைத்திடவும் திட்டமிட்டுள்ளோம்.
ரூபாய் 10 கோடி செலவில், நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணை உட்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் நிறுவிடவும் நமது அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியினை பன்மடங்கு அதிகரிக்கக் கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் ‘ஏற்றுமதி மையங்கள்’ அமைக்கக்கூடிய பணிகளையும் விரைந்து செயல்படுத்தி வருகிறோம்.
இவை அனைத்திற்கும் அடித்தளம் அமைக்கும் கருத்தரங்காக இந்த இரண்டு நாள் கருத்தரங்கம் அமைய வேண்டும். தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான விழிப்புணர்வையும் அதிலுள்ள ஒளிமயமான சந்தை வாய்ப்புகளையும் தொழில் முனைவோரிடம் இக்கருத்தரங்கு ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்.
அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டுத் தொழில்முனைவோர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்நுட்ப ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
‘One Trillion Dollar Economy-2030 என்கின்ற தமிழ்நாடு அரசின் இலக்கிற்குச் செயல் வடிவம் கொடுக்கும் முயற்சிகளில், தொழில்நுட்ப ஜவுளி சார்ந்த இந்த இரண்டு நாள் கருத்தரங்கம் பெரிதும் உதவும் என்ற நம்பிக்கையோடு, இந்த கருத்தரங்கைத் துவங்கி வைக்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மோனிஷா