mk stalin speech in students appreciate ceremony today

முதன்மை கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள்: பட்டியலிட்ட முதல்வர்

தமிழகம்

நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது, “தனியார் பள்ளிகளும், அரசு கல்லூரி – தனியார் கல்லூரிகளும், நிர்வாக அமைப்பில் வேறுபாடு கொண்டதாக இருக்கலாம். ஆனால் தரத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரே அளவுகோலோடுதான் இயங்கவேண்டும்.

இந்த நிறுவனங்கள் எல்லோருக்கும் பொதுவான நிறுவனங்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட சமச்சீர் நிலையைத்தான் உருவாக்கி வருகிறோம்.

நாட்டினுடைய முதன்மைக் கல்வி நிறுவனங்களில் இதுவரைக்கும் நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்கள் மிகக் குறைவான அளவில்தான் உயர்கல்விக்காகப் போயிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும்.

உயர்கல்விக்குப் போகின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக கொண்டுவரப்பட்டதுதான், ‘அனைவருக்கும் ஐ.ஐ.டி’ திட்டம்.

தமிழ்நாட்டினுடைய எங்கேயோ ஒரு கிராமத்தில் இருக்கின்ற ஒரு அரசுப் பள்ளியில் படித்த மாணவரால், ஏன் இதுவரைக்கும் I.I.T, N.L.U, நிஃப்ட் போன்ற நாட்டினுடைய முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்குப் போக முடியாமல் இருந்தது என்றால், அதற்கு என்று தனியாக சமூகப் பொருளாதாரக் காரணங்கள் இருக்கிறது.

நம்முடைய குழந்தைகளுக்கு நாட்டினுடைய உயர்கல்வி நிறுவனங்கள் எவை? அதில் நுழைய எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் முறை என்ன? இப்படி பல தகவல்கள் சென்று சேராமல் இருந்தது.

இப்போது அந்தப் பாதையை உருவாக்கி இருக்கிறோம். அதனால், இன்றைக்கு 225 மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு போகப்போகிறார்கள். பள்ளிக் கல்வித் துறையுடைய கடுமையான முயற்சிகளால்தான் இது சாத்தியமானது.

இங்கே இருக்கின்ற பள்ளி மாணவர்களான உங்களை மாதிரியே உங்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் நிறைய எனர்ஜெட்டியா இருக்கிறார்.

அவரை குழந்தையாக இருக்கின்ற காலத்திலிருந்து நான் பார்த்துக் கொண்டு வருகிறேன். என் கண் முன்னாடி வளர்ந்த பையன், இன்றைக்கு மாண்புமிகு அமைச்சர் என்று நான் சொல்லுகின்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு முதன்மை கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 75. இந்த ஆண்டு 225. இது மிகப்பெரிய சாதனை.

அரசுப் பள்ளி மாணவர்களில் கடந்த ஆண்டு ஐ.ஐ.டி.க்கு போனவர் ஒரே ஒருத்தர்தான். ஆனால் இந்த ஆண்டு, 6 பேர் செல்கிறார்கள்.

கடந்த ஆண்டு தேசிய தொழில்நுட்ப கழகம், இந்திய தகவல் தொழில்நுட்ப கழகங்கள், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றிற்கு சென்றவர்கள் 13 பேர். இந்த ஆண்டு 55 பேர் செல்கிறார்கள்.

National Forensics Science University-க்கு கடந்த கல்வியாண்டில் சென்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஜீரோ. ஆனால் இந்த ஆண்டு 6 பேர் தேர்வாகி இருக்கிறார்கள்.

முழு ஸ்காலர்ஷிப்புடன் தைவான் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் படிப்பதற்கு இரண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள்.

Indian Maritime University-ல் கடந்த ஆண்டு ஒருவரும் போகாத நிலையில் இந்த ஆண்டு 6 மாணவர்கள் செல்லவிருக்கிறார்கள். National Law University-க்கு கடந்த ஆண்டு 4 பேர். இந்த ஆண்டு 9 பேர்.

School of Excellence in Law-வுக்கு கடந்த ஆண்டு ஒருத்தர்தான். இந்த ஆண்டு 7 பேர். National Institute of Fashion Technology-ல் இந்த ஆண்டு 27 பேர் படிக்கப் போகிறார்கள். கடந்த ஆண்டு யாரும் போகவில்லை.

கடந்த ஆண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு 6 பேர் படிக்கப் போனார்கள். இந்தக் கல்வியாண்டில் 20 பேர் செல்கிறார்கள்.

School of Architecture-க்குத்தான் இந்த ஆண்டு அதிகம் பேர் படிக்கப் போகிறார்கள். கடந்த ஆண்டு ஒரே ஒரு மாணவர்தான் அங்கே சென்றார். ஆனால் இந்த ஆண்டு 69 பேர் போகப் போகிறார்கள்.

Indian Institutes of Science Education and Research-க்கு கடந்த ஆண்டு ஒருவரும் போகாத நிலையில், இந்த ஆண்டு அந்த நிலை மாறி, 10 அரசுப் பள்ளி மாணவர்கள் போகிறார்கள்.

இப்படி, மொத்தம் 225 அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து படிக்கப் போகிறீர்கள் என்பது நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

தனியார் பள்ளி மாணவர்களால் மட்டும்தான் இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு போக முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, இன்றைக்கு நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களும் போக முடியும் என்ற சாதனையை நீங்கள் படைத்திருக்கிறீர்கள்.

இது மூலமாக அரசுப் பள்ளியுடைய கல்வித் தரம் உயர்ந்திருக்கிறது என்ற உண்மை உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நான் நினைப்பது என்னவென்றால், உயர்கல்வி நிறுவனங்களுக்குள் நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களான நீங்களும் நுழையும்போதுதான் சமூகநீதி முழுமையடைகின்றது.

2022-23-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில், 25 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டது. இவையெல்லாம் உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து முதன்மைக் கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்கு விருப்பம் இருக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்தோம்.

இந்தக் கல்வியாண்டில், மேலும் 13 பள்ளிகள் தொடங்கப்பட்டு இன்றைக்கு 38 மாவட்டங்களிலும், மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனுடைய விளைவுதான் இன்றைக்கு இத்தனை மாணவர்கள் முதன்மை கல்விநிறுவனங்களில் படிக்க செல்கிறார்கள்.

மாதிரிப் பள்ளிகளினுடைய மாணவர்கள் இந்த நிலையை அடைவதற்கு கடுமையாக உழைத்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மாணவர்களுடைய படிப்பதற்கான செலவை அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது. படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது உங்களுடைய உலகம் ரொம்ப பெரியதாக இருக்கும். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் மலர வேண்டும் என்றால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கின்ற மாதிரி இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனத்துக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் சேரக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீங்கள்தான் வழிகாட்டவேண்டும்.

மேடையில் இருக்கின்ற, IIT, NIT, NLU நிறுவனங்களுடைய பொறுப்பான பதவியில் இருக்கின்ற அலுவலர்களிடம், நான் கேட்டுக் கொள்வதெல்லாம், “எங்கள் பிள்ளைகள் உங்களிடம் வருகிறார்கள். அவர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு வழிகாட்டுங்கள்” என்பதுதான்.

அரசு ஏற்படுத்தித் தருகின்ற வாய்ப்புகள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிங்க! படிங்க! படிங்க! இதுதான் என்னோட வேண்டுகோள்.

படிக்கின்ற காலத்தில் கவனச்சிதறல்கள் இருக்கக்கூடாது. உங்களை இந்தளவுக்கு வளர்த்துவிட்ட உங்களுடைய பெற்றோர்கள் ஆசிரியர்களை மனதில் வைத்து செயல்படுங்கள். இன்னும் பல உயரங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஒளிமயமான எதிர்காலம் உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறது” என்று பேசினார் முதல்வர்.

மோனிஷா

பாத யாத்திரையா? ஷூட்டிங்கா? ராக்கெட் ராஜாவின் ரவுசு எதற்காக?

அசோக் குமார் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *