தமிழகம் முழுவதும் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
கடந்த மார்ச் 3 ஆம் தேதி விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்-ல் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காகத் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழா கோவையில் இன்று (மார்ச் 11) ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “மின்சாரத்துறை அமைச்சர் அவரது பங்கிற்கு நெசவாளர்களுக்கு திட்டங்களைத் தீட்டியிருக்கிறார். எதையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. நான் அவரை அடிக்கடி ‘டார்கெட் அமைச்சர்’ என்று சொல்லுவேன். 1.50 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கியதன் மூலமாக அரசுக்கு மதிப்பு கிடைத்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகாலமாகத் தமிழ்நாட்டை ஒரு கட்சி ஆட்சி செய்தது. அப்போது, 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் மட்டும் தான் வழங்கப்பட்டது. ஆனால் நாம் 20 மாத காலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம்.
கைத்தறி நெசவாளர்களுக்கு 200-ல் இருந்து 300 யூனிட் ஆகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750-ல் இருந்து 1000 யூனிட் ஆகவும் உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஒரு ஆண்டிற்கு 54 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். விசைத்தறி மின் கட்டணத்தை 1 யூனிட்டிற்கு 70 காசுகள் குறைத்ததன் மூலம் இந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு கணிசமான தொகை மீதமாகும்.
இந்தியாவில் உள்ள 24 லட்சத்து 6 ஆயிரம் விசைத்தறிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சம் 63 ஆயிரம் விசைத்தறிகள் இருக்கின்றன. இதில் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
விசைத்தறிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நூல் விலையைக் குறைக்க நீங்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். உங்களது கோரிக்கை நிறைவேற்ற உறுதியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
அரசின் அனைத்து துறைகளுக்குத் தேவையான துணிகளை விசைத்தறிகள் மூலமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். அரசின் சார்பாக அமைக்கப்படும் குழுக்களில் நெசவாளர்கள் பிரதிநிதித்துவம் வேண்டும். ஒன்றிய அரசின் கைத்தறி உற்பத்தி ரக ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள்.
உங்களது கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கிறேன். ஜவுளித்துறைக்கு ஆணி வேராக விளங்குவது நெசவுத் துறை. ஜவுளித்துறையில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் திகழ்ந்திடும் வகையில் மாநிலமெங்கும் ஜவுளி பூங்காக்களை உருவாக்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேற்கு மண்டலத்தில் ஒரு ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது.
தறி தொழிற்சாலைகளுக்குத் தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து பொதுக்கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்படும்.
ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இது மக்களுக்கு இந்த அரசின் மீது இருக்கக்கூடிய மகத்தான நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.
கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்த அரசு மேற்கு மண்டலத்தில் புதிய தொழில்களை உருவாக்கித் தரவில்லை. ஆனால் நாம் செய்துள்ளோம். பெரிய தொழில்கள் மட்டுமல்ல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். ஆனால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் சிறந்த அமைதியான மாநிலமாக இருப்பது பலரது கண்களுக்குப் பொறுக்கவில்லை. இதனை சிலர் சிதைக்கப் பார்க்கிறார்கள். வதந்திகள் மூலமாகப் பொய்களை உருவாக்கி ஆட்சிக்குக் களங்கத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.
எனது பொதுவாழ்கையில் இதுபோன்று எத்தனையோ பூச்சாண்டிகளைப் பார்த்தவன் நான். இந்த சலசலப்புக்கு எல்லாம் இந்த ஸ்டாலின் அஞ்ச மாட்டான்” என்று பேசினார்.
மோனிஷா
அரசியலில் இருந்து விலகியது ஏன் : போட்டுடைத்த நடிகர் ரஜினிகாந்த்
சுப்மன் கில், கோலி அபாரம்: டிராவை நோக்கி செல்லும் 4வது டெஸ்ட்!