“மழைநீர் தேங்காத சென்னை”: முதல்வர் பேச்சு!

தமிழகம்

பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்திலும் மாண்டஸ் புயலின் போதும் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்களுக்குப் பாராட்டு விழா இன்று (ஜனவரி 31) நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, ”நமது அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிக மிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம். அந்த இரண்டு சாதனைகளால் மக்களிடத்தில் நமக்கு நல்ல பாராட்டு கிடைத்திருக்கிறது.

அதில் ஒன்று கொரோனா என்ற கொடிய நோயை எதிர்த்து வென்றோம். இரண்டாவது மழை வெள்ளத்தில் இருந்து மக்களைப் பாதுகாத்தோம். கொரோனாவை கட்டுப்படுத்திய பிறகு மிகப் பெரிய மழையை நாம் சந்தித்தோம்.

ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள், குறிப்பாக 10 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் எதுவும் செய்யாமல் விட்டு விட்ட காரணத்தால், முதல் முறை பெய்த மழையை கட்டுப்படுத்தவே பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. ஆனால் அந்த நெருக்கடிகளை ஒரு பாடமாக நாம் எடுத்துக் கொண்டு வரக்கூடிய காலங்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டோம்.

அடுத்த மழை அல்லது வெள்ளம் வருவதற்கு முன்பு, எவ்வளவு மழை பெய்தாலும், தண்ணீர் எங்கும் தேங்காமல் இருக்கக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டோம். அந்த உறுதியை எந்த அளவிற்குச் செயல்படுத்தினோம் என்பது நாட்டிற்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்.

பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காவல்துறை ஆகிய துறைகளைச் சார்ந்திருக்கக்கூடிய அதிகாரிகள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அத்தனை பேரும் பாராட்டிற்குரியவர்களாக இன்று விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐந்து விரல்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் நமது கையினுடைய பலத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஒரு மணி நேரத்தில் மோட்டாரை வைத்து தண்ணீரை அகற்றியது மாநகராட்சி. நீர் நிலைகளை தூர்வாரியது நீர்வளத்துறை. சாலைகளை உடனடியாக சரிசெய்து கொடுத்தது நெடுஞ்சாலைத் துறை. சீரான மின்சாரத்தை வழங்கியது மின்சாரத்துறை.

பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொண்டது காவல்துறை. இதைத் தான் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோம்.

அனைவரும் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தான் இந்த வெற்றியை நம்மால் பெற முடிந்தது. மழை வெள்ள காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது என்பது மிகச் சிரமம். அதில் எனக்கும் அனுபவம் உண்டு. காரணம் நானும் இரண்டு முறை இந்த மாநகராட்சியின் மேயராக இருந்துள்ளேன்.

mk stalin speech in appreciation ceremony

சென்னையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்டும் ஒவ்வொரு தெருவும் எனக்குத் தெரியும். மழை பெய்து கொண்டு இருக்கும் போதே அதிகாரிகளை அழைத்துக் கொண்டு பாதிப்புகளைப் பார்த்தவன் நான். இப்பவும் அப்படிதான் செயல்பட்டு வருகிறேன்.

எனக்கு முன்பாக அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்களும் இருப்பார்கள். என்னோடு இணைந்து அவர்களும் மழையில் நனைந்து பணியாற்றியவர்கள் தான். இது தான் மக்கள் பணி. கலைஞருடைய பாணி.

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றிய உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அரசாங்க சம்பளம் வருகிறது என்ற எண்ணத்தோடு இல்லாமல், மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்ற அந்த சேவை மனப்பான்மை உள்ளத்தோடு செயல்பட்டதால் தான் இன்று இந்த பாராட்டு, நமக்கும் அரசாங்கத்திற்கும் மாநகராட்சிக்கும் கிடைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக தூய்மை பணியாளர்களின் பணி என்பது மிகவும் மகத்தானது என்பதை நான் இங்குப் பெருமையுடன் சொல்கிறேன். நீங்கள் சிறப்பாக பணியாற்றியதால் தான், முகமலர்ச்சியோடு அரசாங்கத்தை இன்று மக்கள் பார்க்கிறார்கள்.

மழை வெள்ளத்தில் இருந்து சென்னை மாநகராட்சிக்கு ஒரு நிரந்தர தீர்வு வர வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அதனால் தான் ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து, அதன் மூலம் நேரடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மூன்று கட்டங்களாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு திட்டங்களைத் தீட்டி, பருவமழை துவங்குவதற்கு முன்பு வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொண்டோம். அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் 254.67 கோடி மதிப்பீட்டில் 57 கிலோ மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரணத்தின் கீழ் 291.06 கோடி மதிப்பீட்டில் 107.57 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 26.28 கோடி மதிப்பீட்டில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கும் மாநகரின் பிரதான பகுதிகள் புதிய மழைநீர் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

ஆசிய வங்கி வளர்ச்சி நிதி உதவியோடு, கொசஸ்தலை ஆறு வடிநில பகுதிகளில் 3,220 ரூபாய் கோடி மதிப்பீட்டில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி உதவியின் கீழ் கோவளம் வடிநில பகுதிகளில் 1,714 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உலக வங்கி நிதியுதவியோடு விடுபட்ட இடங்களில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது.

2021 ஆம் ஆண்டு பருவமழையின் போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, உடனடியாக நாம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் நாம் செய்து முடித்தோம். அதன் பயனையும் 2022 பருவமழையின் போது பார்த்தோம்.

இனி வரும் காலங்களில் மழைநீர் தேக்கம் இல்லாத சென்னையை மக்கள் நிச்சயமாகப் பார்க்கவிருக்கிறார்கள்” என்று பேசினார்.

மோனிஷா

கடலில் பேனா வைத்தால் உடைப்பேன்: சீமான் ஆவேசம்!

இந்திய பொருளாதாரம் எப்படி உள்ளது?: ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *