முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக தமிழகம் மாறும் அபாயம்… ஸ்டாலின் எச்சரிக்கை!

Published On:

| By Selvam

16-ஆவது நிதிக்குழு கூட்டம் சென்னை கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் நேற்று (நவம்பர் 18) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வின் பங்கை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும், தமிழத்தில் அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கை குறித்தும் அதனால் ஏற்படும் சவால்கள் குறித்தும் நிதிக்குழுவின் கவனத்திற்கு எடுத்துரைத்தார்.

இதுதொடர்பாக பேசிய ஸ்டாலின்,  “தமிழ்நாட்டில் அதிகமாக வளர்ந்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும் இதன்காரணமாக மாநில மக்கள் தொகை அமைப்பில் ஏற்படும் மாற்றம் குறித்தும் நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். தற்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆண்டுகள்.

இது உத்திரப்பிரதேச மாநிலத்தின் சராசரி அளவை விட 9.5 ஆண்டுகள் அதிகம். 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைக் காலம் 2031-ஆம் ஆண்டு முடிவடையும் பொழுது தமிழ்நாட்டின் சராசரி வயதானது 38.5 ஆண்டுகளாக இருக்கும். அதன்படி, நாட்டிலேயே வயதானவர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.

தமிழ்நாடு இதுவரை பெற்று வந்துள்ள மக்கள்தொகை அடிப்படையிலான பயன் வேகமாகக் குறைந்து வருவதையும் சமூகப் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது. அதிகரித்து வரும் முதியவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு எதிர்வரும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு, தேவையான பொருளாதார வளர்ச்சியினை அடைவதுடன் பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை உடனடியாக செய்ய வேண்டியுள்ளது.

அந்த முயற்சியை மேற்கொள்ளாவிடில் முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்னால், முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் அபாயத்தை இன்று சந்தித்து வருகிறது. இந்த மிகமுக்கியமான கருத்தை நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், இந்த சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தையும் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘கங்குவா’ நெகட்டிவ் ரிவ்யூ… யூடியூபர்களுக்கு தடை… திருப்பூர் சுப்பிரமணியம் ஆதங்கம்!

1,000-வது நாளை எட்டும் ரஷ்யா – உக்ரைன் போர்: எச்சரிக்கும் யுனிசெஃப்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share