தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 9) தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமை தொகை 15-ஆம் தேதி வழங்கப்பட்டு வந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1.14 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இன்று வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டு பெண்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது.
இந்தநிலையில், எதிர்வரும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயினை முன்கூட்டியே வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த உத்தரவின் மூலம் பயன்பெறும் 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணிகள் இன்று காலை முதலே தொடங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இன்று அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவுவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…