மதுரையில் அமையும் பின்னக்கிள் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடம் தென் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை எல்கோசெஸ்ஸில் அமைந்துள்ள பின்னக்கிள் இன்போடெக் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரையிலிருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பின்னக்கிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “பின்னக்கிள் தகவல் தொழில்நுட்ப பூங்காவானது இந்தியாவில் அமையும் நான்காவது குளோபல் டெலிவரி சென்டர் ஆகும். 3டி மாடலிங், கட்டிட மேலாண்மை உள்ளிட்ட பல சேவைகளை அளிப்பதாக அமைந்துள்ளது.
பின்னக்கிள் நிறுவனம் மூலம் 6000 இளைஞர்களுக்கு குறிப்பாக தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. நம்முடைய இலக்கு என்பது தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி அனைத்து மாவட்டங்களும் அனைத்து வளர்ச்சியும் பெற வேண்டும் என்பது தான்.
தகவல் தொழில் நுட்பம் என்றாலே கலைஞர் தான். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி காட்டியவர். இந்தியாவிலேயே முதல்முறையாக 1997-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப கொள்கையை உருவாக்கி தமிழ்நாட்டில் ஐடி புரட்சிக்கு வித்திட்டவர் கலைஞர். சென்னையில் டைடல் பூங்காவை அமைத்து ஓஎம்ஆர் சாலையை தகவல் தொழில்நுட்ப தாழ்வாரமாக வழிவகுத்தார்.
எதிர்காலம் என்பது டிஜிட்டல் காலம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் கணிணி பயில்வதை ஊக்குவித்தார். அவர்கள் மென்பொருள் துறையில் சிறந்து விளங்குவதற்கு காரணமானார். தமிழ்நாட்டில் வீதிதோறும் பொறியியல் பட்டாதாரி இருக்கிறார் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர். கலைஞரின் நூற்றாண்டில் மதுரையில் அமையும் பின்னக்கிள் நிறுவனம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
”இந்தியாவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்பணித்தவர் காமராஜர்”-மோடி புகழாரம்!