அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!

Published On:

| By christopher

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிப்பதை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்டம்பர் 16) ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில்  கடந்த 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 120 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட 6க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது இன்று காலை உறுதியாகியுள்ளது.

மாநிலத்தில் தினசரி  பாதிப்பு சராசரியாக 15 முதல் 20 வரை பதிவாகி வரும் நிலையில் கடந்த 12 ஆம் தேதி டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நெருங்கி வரும் வடகிழக்கு பருவமழை சீசனையொட்டி டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிப்பதை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இதில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் டெங்குவை ஒழிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உயிரிழப்பை தடுப்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையே டெங்கு பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனைகளில் தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல, டெங்கு தடுப்பு பணிகளை கிராமங்கள் தோறும் சென்று மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

Asia cup: 11 ஆண்டுகளுக்கு பின் வங்கதேசத்திடம் ’தோல்வி வடு’ கண்ட இந்தியா

கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது நிபா வைரஸ்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel