கல்வி தான் நம்முடைய சொத்து என்று மாணவர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசினார்.
சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில்முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 31) கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாணவிகள் வரவேற்றனர்.அப்போது அங்கு வந்த பெண்களின் தாய்மார்கள் முதல்வரோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் ஸ்டாலின் மேடைக்கு வந்தவுடன் கரகோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு கல்வி கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “எவ்வளவு பணி இருந்தாலும், கொளத்தூர் தொகுதிக்கு வந்து, உங்கள் முகத்தையெல்லாம் பார்த்தால்தான், எனக்குப் புது எனர்ஜியே ஏற்படுகிறது. தமிழ்நாட்டிற்கே நான் முதலமைச்சர். ஆனால், உங்களுக்கு நான் சட்டமன்ற உறுப்பினர். உங்களுடைய அன்பால்தான், உங்களுடைய பேரன்பால்தான், உங்களுடைய வாழ்த்துகளோடு தான் நான் ஹாட்ரிக் வெற்றி பெற்றேன். அதனால், நீங்கள் உரிமையோடு கேட்பதை நிறைவேற்றுகின்ற பொறுப்பு எனக்கு உண்டு. கூடுதல் பொறுப்பு உண்டு.
இந்த அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கடந்த 2:11.2021 அன்று நான் தொடங்கி வைத்தேன். இது தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், 685 மாணவ – மாணவிகள் இந்தக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவே, இந்தக் கல்லூரி எவ்வளவு, நன்றாக செயல்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம். இந்த வெற்றியில் பெரும்பங்கு யாருக்கு என்று கேட்டீர்கள் என்றால், நம்முடைய அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு தான். அவரை நான் எப்போதும் சேகர்பாபு என்று சொல்லாமல் செயல்பாபு என்று சொல்வதுண்டு.
அவர் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர். போன் எடுத்து ரிங்டோன் கேட்டாலே தெரியும். ஐயப்பன் பாட்டுதான் வரும். அதனால் கல்விக்கான கடவுளையும் வணங்குகிறவர். கல்வியே கடவுள் என்று தன்னுடைய பணியை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்.
மாணவர்களான உங்களை சந்திப்பதும் உங்களிடம் பேசுவதும், அதுதான் என்னை எப்போதும் ஆக்டிவ்வாக வைத்துக் கொள்கிறது. அதுதான் உண்மை,
நீங்களும் படிப்பில் ஆக்டிவ்வாக இருக்கிறீர்கள், இருக்கவேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். இந்த படிப்பு நமக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை. எத்தனையோ போராட்டத்திற்கு பிறகு நமக்கு இந்தப் படிப்பு கிடைத்திருக்கிறது. இந்தக் கல்வி தான் நாம் மட்டுமில்லை நம்முடைய தலைமுறையே முன்னேறுவதற்கான இது அச்சாரமாக அமைந்திருக்கிறது. அதனால் தான், நீங்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
நீங்கள் எல்லோரும் நன்றாக படிக்க வேண்டும். இன்னும் சில ஆண்டுகள் கடந்து எங்கேயாவது ஒரு இடத்தில், ஏதாவது ஒரு சூழ்நிலையில், ஏதாவது ஒரு தருணத்தில் என்னை நீங்கள் சந்திக்கும்போது, “உயரமான பதவிகளில், இருக்கிறோம். இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டோம்” என்று பெருமையோடு. சொல்லும் அளவுக்கு அந்த சூழ்நிலை ஏற்பட்டால் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் எனக்கு இருக்க முடியாது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதைத்தான் பெரியார், அண்ணா, கலைஞர் அவர்கள் கண்ட கனவுகள். அவர்கள் கண்ட கனவு இந்த ஸ்டாலின் நிறைவேற்றுகிறான் என்பதில் எனக்கு பெருமை. இதைவிட பெருமை எனக்கு வந்து சேரமுடியாது.
நீங்கள் பெருமை அடைவது ஒரு பக்கம் இருந்தாலும், எனக்கு அதைவிட முக்கியம் எது என்று கேட்டால், நீங்கள் படித்து உங்கள் பெற்றோரை பெருமை அடைய வைக்கவேண்டும். இந்த தாய்த் தமிழ்நாட்டை பெருமை அடைய வைப்பதற்கு கல்விதான். கல்வியை யாராலும் திருடவே முடியாது. அதுதான் நிலையான சொத்து. நீங்கள் எல்லோரும் நன்றாக படியுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்