ஒடிசா ரயில் விபத்து பற்றி தேசிய பேரிடர் மீட்பு படைக்கு முதலில் தகவல் தெரிவித்து பல உயிர்களை காப்பாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த என்டிஆர்எப் வீரர் வெங்கடேசனை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 6) பாராட்டியுள்ளார்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி அன்று இரவு தவறான பாதையில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்து அருகில் இருந்த தண்டவாளங்களில் விழுந்தன.
அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த பெங்களூரு – ஹவுரா விரைவு ரயிலும், ரயில் பெட்டிகளில் மோதி தடம் புரண்டது. இந்த கோர விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர். 1,100 பேர் காயம் அடைந்தனர்.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்து குறித்து முதன்முதலில் மீட்புப்படைக்கு தகவல் தெரிவித்தவர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த என்டிஆர்எப் வீரர் வெங்கடேசன். வயது 39.
முதலில் தான் பணியாற்றும் கொல்கத்தா பட்டாலியன் இன்ஸ்பெக்டருக்கும், அதன் பின் என்டிஆர்எப் கட்டுப்பாட்டு அறைக்கும், விபத்து படங்கள் மற்றும் இருப்பிடம் பற்றிய விவரத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினார்.
இத்தகவல் அடிப் படையில் என்டிஆர்எப் முதல் குழு ரயில் விபத்து நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது.
இதனையடுத்து பல உயிர்கள் விரைந்து காப்பாற்றப்பட்டதற்கு காரணமான வெங்கடேசனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், ஒடிசா ரயில் விபத்தில் துரிதமாக செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த வீரர் வெங்கடேசனுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், “#OdishaTrainAccident-இல் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன்.
உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும்”: எடப்பாடி
பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை!