தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான நாசரின் தந்தை இன்று (அக்டோபர் 10) காலமானதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், பாடகர், நாடக கலைஞர் மற்றும் அரசியல்வாதி என என பன்முக ஆளுமை கொண்டவராக விளங்கி வருபவர் நாசர்.
கோலிவுட்டை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் பிரபலமான குணச்சித்திர நடிகராக தொடர்ந்து அசத்தி வருகிறார். மேலும் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் நாசர் உள்ளார்.
நாசரின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதில் அவரது தந்தை மெகபூப் பாஷாவுக்கு முக்கிய பங்கு உண்டு. செங்கல்பட்டில் நகைகளைப் பாலிஷ் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த பாஷா தான், சிறுவயதில் நாசருக்குள் மறைந்திருந்த நடிகனை கண்டு கொண்டு, அதில் கவனம் செலுத்துமாறும் கூறினார்.
தந்தையின் விருப்பத்தின் பேரிலேயே கூத்துப்பட்டறை உள்ளிட்ட நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்து நடிப்பில் தன்னை மெருகேற்றிக்கொண்டார். அதன்பின்னர் தமிழ் சினிமாவில் வில்லனாக, ஹீரோவாக, குணசத்திர நடிகராக பரிணமிக்க தொடங்கினார்.
இந்த நிலையில், செங்கல்பட்டில் உள்ள நசாரின் சகோதரர் ஜவஹர் வீட்டில் வந்த அவரது 95 வயதான தந்தை மெகபூப் பாஷா வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
இதனையடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் இரங்கல்!
நடிகர் நாசரின் தந்தை மறைவிற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் அவர்களின் தந்தை பாஷா அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன்.
தந்தையின் மறைவால் வாடும் திரு. நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: நாளை விசாரணை!
ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்