கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உடல் உபாதைகளால் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (ஜூன் 18) அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பாக்கெட் சாராயம் குடித்தது காவல்துறை மற்றும் வருவாய்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், கள்ளச்சாராயம் குடித்த 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ஸ்வீட் பாக்ஸுக்காக காத்திருக்கிறேன்” : ஸ்டாலின் வாழ்த்துக்கு ராகுலின் சுவாரஸ்ய பதிவு!
நாடாளுமன்றத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களால் தடுத்து நிறுத்தம் : எம்.பி அப்துல்லா புகார்!