தமிழக அரசுப் பணியிடங்களில் வரும் காலத்தில் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா இன்று (நவம்பர் 22) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “பட்டம் பெறும் நாள் என்பது உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியமான நாள். உங்களது பட்டங்கள் இன்னும் உங்களை உயரத்திற்கு கொண்டு செல்லும்.
நீங்கள் பெற்ற அறிவு உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை உங்களை தலைநிமிர வாழ வைக்கட்டும்.
பாடங்களை படிப்பவர்களாக மட்டுமல்லாமல், பாடங்களை உருவாக்கக் கூடியவர்களாக நீங்கள் உயர வேண்டும்.
பழம் பெருமையான ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டம் தீட்டினார். இந்த கல்லூரியை இடிக்க கூடாது என்று சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம்.
கல்லூரியில் படித்த மாணவிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்குள் குடிநீர் சப்ளை மற்றும் கழிப்பறைகளை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்தார்கள்.
கல்லூரியை மூடிவிட்டு இங்கு பணியாற்றிய பேராசிரியர்களை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்தார்கள்.
ராணி மேரி கல்லூரி போரட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என்று சொல்லி விட்டு வாருங்கள் என்று கலைஞர் எங்களிடம் சொன்னார். மாணவிகளை சந்தித்து திமுக தரப்பில் எங்களது ஆதரவை தெரிவித்தோம்.
இரவு 2 மணிக்கு வேளச்சேரியில் உள்ள எனது வீட்டிற்கு காவல்துறை வந்து ராணி மேரி கல்லூரியில் போராடக்கூடிய மாணவிகளை நீங்கள் சுவர் எகிறி குதித்து சென்று பார்த்த காரணத்தினால் உங்களை கைது செய்ய வந்துள்ளோம் என்று கூறினார்கள்.
என்னை கைது செய்து 1 மாத காலம் கடலூர் சிறையில் அடைத்தார்கள். இந்த கல்லூரி வளாகத்திற்கு கேப்பர் என்று பெயர். கடலூரில் என்னை கேப்பர் என்ற சிறையில் அடைத்தார்கள். எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.
மாணவிகளுக்காக துணை நின்றது மறக்க முடியாத ஒரு சம்பவமாக இருக்கிறது. பட்டம் பெறுகிறவர்கள் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பெண்களுக்கு அரசு பதவிகளில் 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது முன்னாள் முதல்வர் கலைஞர்.
வரும் காலத்தில் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை.
பெண்கள் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதுமை பெண் உயர்கல்வி திட்டத்தின் மூலம் ராணி மேரி கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
செல்வம்
அவ்வை நடராஜன் மறைவு: காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி!
ஆறு பேர் விடுதலை: காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனுத்தாக்கல்?