சென்னை மாநகராட்சியில் கடந்த வாரம் பெய்த கன மழையில் மழைநீர் தேங்காமல் ஆட்சிக்கு நற்பெயர் ஏற்படுத்திக் கொடுத்த ஆணையர் ககன்தீப் சிங் பேடியை முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. கடந்த வாரம் சென்னையில் பெய்த கன மழையால், சென்னை மாநகராட்சி தண்ணீரில் மிதக்க போகிறது என்று மக்கள் பயந்தனர்.
திமுக அரசை விமர்சனம் செய்ய எதிர் கட்சியினர் காத்திருந்தனர். ஆனால், சென்னையில் மழைநீர் தேங்காத அளவிற்கு உடனுக்குடன் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்த போது, “ஆணையாளர் ககன் தீப்சிங் பேடி ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றவுடன் சென்னையில் உள்ள வடிகால் வாய்க்கால் மீது கவனம் செலுத்தி வந்தார்.
பருவ மழை வருவதற்கு முன்னால் வடிகால் வாய்க்கால்களை சரிசெய்ய வேண்டும் என்று மூன்று மாதத்திற்கு ஒரு முறை அதிகாரிகளுடன் ககன்தீப் சிங் பேடி ஆய்வுக்கூட்டம் நடத்தி வேலைகளைத் துரிதப்படுத்தினார்.
பருவ மழைக்கு முன்பாக, 1,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீரை ஓடவிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மழை நீர் வடிகால் பணிகளை 15 ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த ஆறு மாதமாக கண்காணித்து வந்தார்கள்.
மழைநீரானது வடிகால் வாய்க்கால் வழியாக சென்று பல வாய்க்கால் இணையும் இடத்தில் பிரிக் காஸ்ட் பைப் பயன்படுத்தி ஈசியாக வெளியேற்றப்பட்டது.
முக்கியமாக தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களைத் தேர்வு செய்து, குறிப்பாக வடசென்னை, கொளத்தூர் பகுதிகளில் 124 மோட்டார்களை பயன்படுத்தி மழைநீர் தேங்காத அளவுக்கு உடனுக்குடன் வெளியேற்றப்பட்டது.
அதனால் சென்னை மாநகராட்சி சிறப்பாக பாதுகாக்கப்பட்டதால் ஆணையர் ககன் தீப்சிங் பேடியை தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டினார்கள். முதல்வர் ஸ்டாலினும் ஆணையரை பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்” என்று கூறினார்கள்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்தியது குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியைத் தொடர்பு கொண்டோம். மக்களின் பாராட்டுகளை தெரிவித்து மின்னம்பலம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து, ’இது எப்படி சாத்தியமாயிற்று?’ என்று அவரிடம் கேட்டோம்.
நன்றி சொல்லியபடியே நம்மிடம் பேசினார் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ்.
“மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது, அமைச்சர் கே .என் நேரு ஆய்வுக் கூட்டம் நடத்தி தேவைப்படும் நிதியை உடனுக்குடன் தடையில்லாமல் வழங்கினார்.
மழைநீர் வடிகால் பணி வேலைகள் தொய்வு இல்லாமல் வேகமாக நடைபெற்றது. இரவும் பகலுமாக, துப்பரவு பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரையில் ஓய்வில்லாமல் பணி செய்தனர். கவுன்சிலர்கள் ஈடுபாடுடன் ஒத்துழைப்பு அளித்தார்கள்.
மாநகராட்சி மேயர் பிரியா துடிப்போடு பணியாற்றினார். இது ஒர் கூட்டு முயற்சி. வரும் காலத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கும் என்ற அச்சம் தேவையில்லை அந்த அளவுக்கு தொலைத் தூரத் திட்டத்துடன் வடிகால் வாய்க்கால்களை சரிசெய்து வருகிறது இந்த அரசு” என்று தெரிவித்தார் சென்னை மாநகராட்சி ஆணையர்.
வணங்காமுடி
மீண்டும் கனமழை: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!
பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு ஊழியர்கள்!