மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் நோய் அண்டாமல் தடுக்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு இந்த எலுமிச்சை – கொத்தமல்லித்தழை – காய்கறி சூப் உதவும். வைட்டமின்-சி நிறைந்த சூப் அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
பால் – கால் கப்
கேரட் – ஒன்று
பீன்ஸ் – 10
பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் – 10
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 2 பல்
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறு எடுக்கவும்)
உப்பு – தேவைக்கேற்ப
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
குக்கரில் வெண்ணெயை சூடாக்கி பட்டை, நறுக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், காய்கறிகள், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். தேவைக்கேற்ப நீர் சேர்த்து வேகவிடவும். காய்கறிகள் வெந்ததும் நீரை வடிகட்டி ஆறவிடவும்.
பிறகு, வெந்த காய்கறிகளை தேவையான அளவு நீர் விட்டு மையாக அரைத்து, வடிகட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காய்கறிகள் வெந்த நீரையும், வேகவைத்து அரைத்து வடிகட்டிய நீரையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் பால் சேர்க்கவும்.
சூப் பதம் வந்ததும் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலக்கி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும். விருப்பப்பட்டால் க்ரீம் சேர்க்கவும்.
சோயா உணவுகள் எல்லோருக்கும் ஏற்றதா?
பனிவரகு – மஷ்ரூம் – டொமேட்டோ சூப்!