மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை (நவம்பர் 16) புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனாலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே நவம்பர் 14 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த ‘மிதிலி’ (Mithili) என்ற பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடிய காரணங்களால் தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு குறைவு. தமிழகத்தின் தென் மாவட்டங்களில், குறிப்பாகத் தென் மாவட்டத்தை ஒட்டிய கடலோர மாவட்டங்களில் மிதமான அளவில் மழை தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், பாம்பன், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
அரசு மரியாதையுடன் ‘தகைசால் தமிழர்’ சங்கரய்யா உடல் தகனம்!
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!