ஹெமா குழுவின் அறிக்கை மலையாள திரைத்துறையை உலுக்கிக்கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் நடிகை மினு முனீர் தன் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை நடிகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார் .
மலையாள திரைத்துறையில் பணிபுரியும் பெண் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அந்த திரைத்துறையைச் சார்ந்த நபர்களால் சந்திக்கும் பாலியல் ரீதியான தொல்லைகளை விசாரிக்க முன்னாள் நீதிபதி ஹேமாவின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் அறிக்கை கடந்த மாதம் வெளியானதை அடுத்து, மலையாள பெண் நடிகர்கள், மலையாள திரைத்துறையில் தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியான பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மலையாள நடிகர் ஜெயசூர்யா, முன்னாள் மலையாள நடிகை மினு முனீர் தன் மீது சுமத்தியிருந்த பாலியல் குற்றச்சாட்டை மறுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (செப்டம்பர் 1) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் “ என்னுடைய பிறந்த நாளான இன்று எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மற்றும் எனக்கு ஆதரவாக நிற்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
சொந்த விஷயம் காரணமாக நானும் எனது குடும்பமும் கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவில் இருக்கிறோம். இந்த நேரத்தில் தான் , நான் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக எனக்கு எதிராக இரண்டு பொய்க் குற்றச்சாட்டுகள் பரபப்பட்டுவருகிறது. இது என்னையும் எனது குடும்பத்தையும் பாதித்துள்ளது.
நான் இந்த குற்றச்சாட்டுகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளேன். எனது சட்ட குழு இதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடும்.
மனசாட்சி இல்லாதவர்களுக்குப் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்துவது சுலபம். பாலியல் ரீதியான தொல்லைகள் எதிர்கொள்வது எவ்வளவு வலியைத் தருமோ அதே போலப் பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்க்கொளவதும் அதே வலியைத் தான் தரும் என்று இது போன்ற பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்துபவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். என்னதான் பொய் உண்மையை விட வேகமாகப் பரவினாலும், இறுதியில் உண்மைதான் வெற்றிபெறும்.
அமெரிக்காவில் எனது பணி நிறைவடைந்ததும், இந்தியாவிற்குத் திரும்பி விடுவேன். அதுவரை எனது சட்ட குழு, நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும். எனக்கு நீதித் துறை மீது முழு நம்பிக்கை உள்ளது.
என்னுடைய பிறந்தநாளை வலி மிக்க ஒன்றாக மாற்றியவர்களுக்கும் எனது நன்றிகள்.
பாவம் செய்யாதவர்கள் கல்லெறிய வேண்டாம், மாறாகப் பாவம் செய்தவர்கள் மீது தான் கல்லெறிய வேண்டும்” என்று நடிகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடிகை மினு முனீர் நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மற்றும் 5 நபர்கள் தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததால் நான் மலையாளத் திரைத்துறையை விட்டே விலகி, சென்னைக்குக் குடிபெயர்ந்தேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரஜினிக்காக சூர்யா எடுத்த முடிவு: ‘கங்குவா’ அப்டேட்!
ரூ.150 வரை சுங்கக் கட்டணம் உயர்வு : வாகன ஓட்டிகள் கவலை!
சிலிண்டர் விலை உயர்வு : ரூ.1,855க்கு விற்பனை!