சிறார் வழக்குகள்: விதிமுறைகளை வகுக்க உயர்நீதிமன்றம் முடிவு!

தமிழகம்

சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

மாணவனுக்கு எதிராக  சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தநிலையில், மாவட்ட குழந்தைகள் நலக்குழு மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது.

மாணவியை மீட்கக்கோரி மாணவியின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை  விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவியை  உடனடியாக விடுவித்து பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

மேலும் மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

 இந்த வழக்கு நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் இன்று(நவம்பர் 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கைது செய்யப்பட்ட மாணவன், சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் இழைத்திருந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யவேண்டும் என சிறார் நீதி சட்டத்தில் கூறியுள்ளது.

இந்தநிலையில் மாணவனை கைது செய்தது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் இ.வி.சந்துருவை நியமித்தனர்.

இதுசம்பந்தமான உச்ச நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்டு கருத்துக்களை, இரு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழக உள்துறை செயலாளர், சுகாதார துறை செயலாளர், மகளிர் நலன் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

கலை.ரா

தப்ப முயன்ற பாலியல் குற்றவாளி: தடுத்து நிறுத்திய காவலர் மீது கார் ஏற்றிய கொடூரம்!

பட்டாசு ஆலை விபத்து: முதலமைச்சர் நிதியுதவி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0