திருவண்ணாமலை தீபம்: தீயாய் வேலை செய்யும் அமைச்சர்கள், அதிகாரிகள்- ஸ்பாட் ரிப்போர்ட்!

உலகப்  புகழ் பெற்ற திருவண்ணாமலை தீபத் திருவிழா நாளை  (டிசம்பர் 13) ஆம் தேதி நடக்க இருக்கிறது.

நாளை காலை பரணி தீபம் ஏற்றப்பட, மாலை மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. அதற்காக 350 கிலோ கொண்ட கொப்பரைத் திரி,  40 டன் நெய் ஆகியவை இன்று  காலை மலை மீது கொண்டு செல்லப்பட்டன. இந்த பணியில் சுமார்  30 பேருக்கு மேல் ஈடுபட்டனர்.

 “திருவண்ணாமலை தீபத் திருவிழா எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என சட்டமன்றத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அதற்கேற்ற வகையில் மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மிகத் தீவிரமாக பணிகளை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

டிசம்பர் 12 ஆம் தேதி திருவண்ணாமலையில் திராவிட தீபமான பெரியாருக்கு கேரளாவின் வைக்கத்தில் நினைவகத் திறப்பு விழாவில் பிசியாக இருந்த அமைச்சர் எ.வ.வேலு,  அங்கிருந்தபடியே திருவண்ணாமலை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தீபத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பற்றி கேட்டபடியே இருந்தார். கேரளா விழா முடிந்து தமிழகம் திரும்பி, திருவண்ணாமலைக்கு விரைந்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

அதேபோல தீபத் திருவிழாவின்  இன்னொரு முக்கியமான விவகாரம் மக்களுக்கான பொதுப் போக்குவரத்து.  மற்ற நகரங்களை ஒப்பிடும்போது, சிறிய நகரான திருவண்ணாமலை நகரத்தில் தீபத் திருவிழாவுக்காக மட்டுமே கடந்த வருடம் 40 லட்சம் பக்தர்கள் திரண்டனர். இந்த வருடம்  50 லட்சம் பக்தர்கள் திரளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அடிப்படையில்  திருவண்ணாமலையை சுற்றி 24 +2  தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகிற பேருந்துகள் நிற்பதற்கு 24 பேருந்து நிலையங்களும், கர்நாடகா-ஆந்திரா மாநிலங்களில் இருந்து வருகிற பேருந்துகளுக்காக 2 பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தற்காலிக பேருந்து நிலையமும் குறைந்தபட்சம் 50 பேருந்துகள் அதிகபட்சம் 300 பேருந்துகள் நிற்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (டிசம்பர் 12) சென்னையில் இருந்து திருவண்ணாமலை புறப்பட்டவர் முதலில் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்குச் சென்றார்.  சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசித்தார்.

அதன் பின் திருவண்ணாமலை சென்றவர் ஒவ்வொரு தற்காலிக பேருந்து நிலையத்துக்கும்  நேரடியாக சென்றார்.  மழை பெய்துகொண்டிருந்த நிலையில்…  பஸ் நிலையங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்குமா என்றும், பயணிகளுக்கு முறைப்படி அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பது உள்ளிட்ட பணிகளை ஆராய்ந்தார்.

மாவட்ட கலெக்டர், அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள்,  அந்தந்த பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,  போக்குவரத்துத் தொழிற்சங்க பிரதிநிதிகள் என அனைவரிடமும் பேசி, ‘தீபத் திருவிழாவில் அரசுப் போக்குவரத்து சுமுகமாகவும், சீராகவும் இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார் சிவசங்கர்.

தற்காலிக கார் பார்க்கிங் கும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறைந்தது 50 கார்கள் முதல், அதிகபட்சம் 300 கார்கள் வரை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் இப்படி என்றால் இன்னொரு பக்கம் காவல்துறை உயரதிகாரிகளும் திருவண்ணாமலையில் முகாமிட்டு, தீபத் திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துள்ளனர்.

தீபத் திருவிழாவை  ஒட்டி வழங்கப்படும் விஐபிகளின் பாதுகாப்பு முதல் லட்சக்கணக்கில் திரளும் பொதுமக்களின் பாதுகாப்பு வரை போலீஸ் துறைதான் பொறுப்பு.

இதனால் காவல்துறை உயரதிகாரிகள் டிசம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் முக்கிய ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

டிசம்பர் 11 ஆம் தேதி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் போலீஸ் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடந்தது.  இதில் விஐபி பாஸ் முதல் கிரிவல  பாதுகாப்பு வரை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தார் அஸ்ரா கர்க்.

விஐபி பாஸ் பற்றிய போலீசாரின் குமுறலும் அஸ்ரா கர்க் காதுகளுக்கு சென்றிருக்கிறது.

‘ஒவ்வொரு வருடமும் விஐபி பாஸ்தான் எங்களுக்கு பெரும் பிரச்சினையாகிறது. ஒரு பாஸ் -க்கு ஒருவர்தான் வரமுடியும். ஆனால் வி.ஐ.பி.கள் ஒரு பாஸ் மட்டுமே வைத்துக் கொண்டு நான்கு பேர், ஐந்து பேர் என நண்பர்கள், குடும்பத்தோடு வருகிறார்கள். அப்போது கோயில் வாசலில் அவர்களை அனுமதிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால், ‘நான் யார் தெரியுமா?’ என்றெல்லாம் பாதுகாப்பு போலீசாரிடம் அவர்கள் கோபப்படுகிறார்கள். இந்த முறையும் இது நடக்கக் கூடாது’ என்பதுதான் போலீசாரின் புலம்பல்.

இந்த முறை ஒவ்வொரு விஐபி பாஸிலும் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு பாஸ்தான் என்றும் விஐபிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தீபத் திருவிழா மாலையில்  சில விஐபிகள் முரண்டுபிடிப்பது தொடர்கதையாகிதான் வருகிறது.

இந்நிலையில்தான் டிசம்பர் 11 ஆம் தேதி நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஐ.ஜி.அஸ்ரா கர்க்,

 “தீபத் திருவிழா பொதுமக்களுக்கு எந்த விதமான சங்கடமும் இல்லாமல் நடக்க வேண்டும். க்ரைம் எதுவும் நடந்துவிடக் கூடாது.  கண்காணிப்பை பலப்படுத்துங்கள். விஐபி பாஸ் விவகாரத்தில் போலீஸாரின் வேதனை எனக்கு புரிகிறது. இந்த முறை அவர் எப்படியாப்பட்ட விஐபியாக இருந்தாலும் சரி… பாஸ் விவகாரத்தில் தகராறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுப்போம்’ என்று சொல்லி போலீசாரையே ஒரு கணம் ஜெர்க் ஆக வைத்தார்.

தொடர்ந்து இன்று (டிசம்பர் 12) திருவண்ணாமலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,  வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க்,  3 டி.ஐ.ஜி.க்கள்,  பாதுகாப்புக்காக வந்துள்ள 15 மாவட்ட எஸ்.பி.க்கள்,  ஏ.எஸ்.பிக்கள், ஏ.டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஏடிஜிபி  டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்,

 “கோயிலைச் சுற்றி கிரிவல பாதையில் எந்த வாகனமும் இருக்கக் கூடாது. போலீஸ் வாகனம் உள்ளிட்ட எந்த வாகனமும் இருக்கக் கூடாது. நாமும் பாதுகாப்பு பணியை நடந்துதான் மேற்கொள்ள வேண்டும்.  மக்களை  எவ்வித தொந்தரவும் ஏற்படக்கூடாது. லட்சக்கணக்கான மக்கள் கூடும் நேரம் என்பதால்  மக்களிடம் கனிவாக  நடந்துகொள்ளுங்கள்.  அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

சிறு அசம்பாவிதம் கூட நேர்ந்துவிடக் கூடாது என்ற முனைப்போடு பணியாற்றுங்கள். இந்த நாட்கள் போலீஸாருக்கு சவாலான நாட்கள்தான். தீபத் திருவிழாவை அமைதியாக நடத்தி மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதுதான் நமது  இலக்கு” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் முகாமிட்டு சுற்றிச் சுற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கும் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் இன்று  (டிசம்பர் 12) மாலை 5.30 மணிக்கு தீபத் திருவிழாவின் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸ் உயரதிகாரிகள் முதல் எஸ்.ஐ. வரைக்கும்   வாக்கி டாக்கி மைக்கில் முக்கிய  அறிவுறுத்தலை செய்துள்ளார்.

”கார் பார்க்கிங் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் பார்த்தவரை சில கார் பாக்கிங் பகுதிகளில் மழை பெய்ததால் தண்ணீர் தேங்கியிருக்கிறது. நாளைக்கும் மழை பெய்யலாம். ஆனால், பார்க்கிங்   பகுதிகளில் தண்ணீர் தேங்கக் கூடாது.  தற்காலிக பஸ் நிலையங்கள்,  கார் பார்க்கிங் பகுதிகளுக்கு செல்லக் கூடிய பாதையில் தண்ணீர் தேங்கி சிரமம் ஏற்படுத்தும் வகையில் இருந்தால்… நீங்களே  (அதாவது போலீஸ் அதிகாரிகளே) அந்த பகுதிகளில் மண்ணை கொண்டு வந்து கொட்டும் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளுங்கள். இதை மற்ற துறைகள் செய்வார்கள் என்று காத்திருக்க வேண்டாம்.

தண்ணீர் தேங்கிய இடங்களில் லாரிகளில் மண்ணைக் கொண்டுவந்து கொட்டி அந்த இடத்தை ஆக்சஸபிள் ஆக்குங்கள். இதற்கான செலவு பற்றி கவலைப்பட வேண்டாம். பில்லை எனக்கு அனுப்பி வையுங்கள். நான் உங்களுக்கு அதை பெற்றுத் தருகிறேன்” என்று உத்தரவிட்டார்.

அதன்படியே பாதுகாப்புப் பணியோடு சேர்த்து போலீஸார் திருவண்ணாமலையில் தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் பார்க்கிங் பகுதிகளுக்கு போகும் வழியில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதை மண்ணடித்து சரி செய்யும் வேலைகளிலும் இறங்கிவிட்டனர் போலீஸார்.

இப்படி அமைச்சர்களும், காவல்துறையினரும், அரசு  அதிகாரிகளும் தீபத் திருவிழாவுக்காக  தீயாக வேலை செய்து வருகிறார்கள்.

-வணங்காமுடி,  வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

”இந்தியாவுக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள்” : குகேஷ்க்கு குவியும் தலைவர்கள் வாழ்த்து!

ரசிகர்களுக்கு பர்த்டே ’வைப்’ கொடுத்த ரஜினி… அசத்தும் கூலி பட அப்டேட்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts