மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜனவரி 17) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
காளைகளை துன்புறுத்த மாட்டோம் என காளையர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பின், உதயநிதி ஸ்டாலின் ஊர் காளைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பச்சை கொடி காட்டி போட்டியைத் தொடங்கி வைத்ததும் ஊர் மரியாதை காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. முதலில் முனியாண்டி கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.
தொடர்ந்து காளைகள் அவிழ்த்துவிடப்படும் நிலையில், சிறப்பாக விளையாடிய தஞ்சையை சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி தங்க மோதிரம் அணிவித்தார்.
அதுபோன்று அதிக காளைகளைத் தழுவி முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி சார்பில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெறும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பைக் பரிசாக வழங்கப்படவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்கக் காசு வழங்கப்படவுள்ளது.
மொத்தம் 1000 காளைகள், 300க்கும் மேற்பட்ட காளையர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 2 எஸ்பிக்கள், 8 உதவி எஸ்பிக்கள், 29 டிஎஸ்பிக்கள், 60 காவல் ஆய்வாளர்கள் என 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் .
அதுபோன்று 20 ஆம்புலன்ஸுடன் மருத்துவக் குழுவினரும் தயாராக உள்ளனர்.
பிரியா