அயலகத் தமிழர் நலத்துறையின் சாதனைகள்: பட்டியலிட்ட உதயநிதி
அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலனை காப்பதில் அயலகத் தமிழர் நலத்துறை முன்வரிசையில் உள்ளது என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜனவரி 11) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் (ஜனவரி 11,12) அயலகத் தமிழர் தின விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
இதில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “அயலகத் தமிழர்கள் நலனில் திமுக அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு உதாரணமாக தான் அயலகத் தமிழர் நலவாரியத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பண்டைய காலத்தில் தமிழர்கள் உலகெங்கும் பரவி வாழ்ந்தார்கள். இந்த நிலை கடந்த 20 ஆண்டுகளில் முன்பை விட அதிகமாகியுள்ளது. கல்வி மற்றும் வேலைக்காக அதிகளவில் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.
எந்த நாட்டுக்குப் போனாலும் தமிழ் பேசுகின்ற மக்களை காண முடிகிறது. கிட்டத்தட்ட 135 நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் இந்தத் துறை உருவாக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் வெளிநாடுகளில் வேலை என்று டிராவல் ஏஜெண்டுகள் ஏமாற்றும் செய்திகளை தினசரி பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் அந்த நிலை இன்று மாறியுள்ளது. அயலகத் தமிழர் நலத்துறை மேற்கொண்ட பணிகளே இதற்கு காரணமாகும்.
சட்டப்பூர்வமாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை பெற வழிகாட்டும் விதமாக ‘ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு செவிலியர்களுக்கு வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்பைப் பற்றி ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நடத்திய கருத்தரங்கினை நான் தொடங்கி வைத்து உரையாற்றினேன்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது மட்டுமல்ல, பணிக்காக அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலனைக் காப்பதிலும் நம்முடைய அயலகத் தமிழர் நலத்துறை முன்வரிசையில் இருக்கிறது.
வெளிநாடுகளில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ, பணிக்கு எடுத்த நிறுவனங்களால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலோ அயலகத் தமிழர் நலத்துறைக்கு தகவல் கொடுத்தால் உடனே பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு அவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்கும் பணியை நம்முடைய துறை மேற்கொள்கிறது. மீட்பது மட்டுமன்றி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதனால் இந்த துறையை அயலகத் தமிழர் நலத்துறை என்று மட்டும் சொல்லாமல் அயலகத் தமிழர் நலத்துறை மற்றும் மறுவாழ்வு துறை என்று சொல்கிறோம்.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் போது அங்கு தமிழர்கள் உயிரிழந்தால், அவர்களின் உடலை 8 முதல் 10 நாட்களுக்குள் அவர்களுடைய குடும்பத்தினரிடம் நாம் சேர்த்துக்கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் நடந்த உக்ரைன், ரஷ்யா போரின் போது அந்த நாடுகளில் படித்த மாணவர்களை பத்திரமாக மீட்டு தமிழ்நாடு அழைத்து வந்தது நம்முடைய அயலகத் தமிழர் நலத்துறை தான்.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் போரின் போதும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மற்றும் செவிலியர்களை தமிழ்நாட்டிற்கு நம்முடைய அரசு மீட்டு கொண்டு வந்தது. அந்த பணிகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்தது அயலகத் தமிழர் நலத்துறை தான்.
தமிழ்நாடு வாழ் தமிழர்களுக்கு எப்படி திட்டங்கள் தீட்டப்படுகிறதோ, அதேபோல வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் நம்முடைய துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுடைய பிள்ளைகள் தமிழ் மொழியை கற்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக நூல்களை வழங்கி அவர்கள் தமிழ் கற்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறோம்.
தமிழர்கள் பல நாடுகளில் தொழில் முனைவோர்களாக உள்ளனர். அவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கும் விதமாகவும் பல்வேறு பணிகள் நமது அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இதே அரங்கில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தமிழ் தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.
அயலகத் தமிழர்கள் தமிழ் வளர்ச்சி பணியை போற்றுகின்ற வகையில், உலக தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகளுக்கு விருதுகளையும், பரிசுகளையும் திமுக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் அயலகத் தமிழர் நலத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை மூலமாகவே சாத்தியமாகிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: சேலத்தில் 300 பேர் கைது!
ஓபிஎஸூக்கு தொடர் பின்னடைவு: கே.பி.முனுசாமி விமர்சனம்!