thangam thennarasu thanks fisherman

கனமழையில் மக்களுக்காக உயிரை பணயம் வைத்த மீனவர்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி!

தமிழகம்

திருநெல்வேலியில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்ட மீனவர்களை நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (டிசம்பர் 19) நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் போக்குவரத்தும் முழுமையாக பாதிக்கப்பட்டதால் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமலும் மக்கள் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சின்னமுட்டம், தூத்தூர் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த 400 மீனவர்கள் 72 பைபர் படகுகளுடன் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இவர்கள் தங்கள் உயிரினை துச்சமாக கருதி திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக மழை நீர் தேங்கிய ஜங்ஷன், கொக்கிரகுளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிந்துபூந்துறை, சிஎன் வில்லேஜ், குறுக்குத்துறை, நொச்சிக்குளம், முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், ஆகிய பகுதிகளில் வெளியேற முடியாமல் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் அடைந்திருந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டுப் பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.

தற்போது மழை ஓய்ந்த நிலையில் மீனவர்கள் பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் தங்கியுள்ளனர். தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்ட மீனவர்களை நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும் திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

மீனவர்கள் அமைச்சரிடம் தங்கள் படகுகளை மீண்டும் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

பொன்முடி விடுதலை ரத்து: தண்டனை என்ன?

தங்கம் விலை திடீர் உயர்வு: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0