மழை நீர் தேங்கிய இடங்களில் வடிந்தவுடன் மீண்டும் மின் சேவை வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (டிசம்பர் 4) தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலரும் மீண்டும் மின் சேவை எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில் கனமழை காரணமாக மின்சேவையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, “கன மழையின் காரணமாக இன்று அதிகாலை 4.30 மணி முதல் மின்சார சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. புளியந்தோப்பு, மணலி துணை மின் நிலையங்களில் ஏற்பட்ட பாதிப்பு சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு காரணங்களை கருதி பல இடங்களில் மின்சார சப்ளையை நிறுத்தியுள்ளோம். மிகவும் அத்தியாவசியான தேவைகளுக்கு மட்டும் தான் மக்கள் வெளியே வர வேண்டும். மழைநீர் வடிந்தவுடன் மின் சேவை மீண்டும் கொடுக்கப்படும். இதற்காக மற்ற மாவட்டங்களில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மிக விரைவில் மின் சேவை வழங்கப்படும். மருத்துவமனைகளுக்கு மின் வசதி தடையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
பல இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால் மின் ஊழியர்களின் பாதுகாப்பையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எவ்வளவு விரைவில் மின் இணைப்பு சேவை விரைவாக வழங்கப்படும்.
உயர் அழுத்த மின் கோபுரங்களில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. துணை மின் நிலையங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மின் சப்ளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய முடியவில்லை. மின்சாரத்தை பயன்படுத்துவதை கூடுமான அளவிற்கு குறைத்துக்கொள்ளுஙகள்.
மின் கம்பங்கள் பக்கத்தில் பொதுமக்கள் செல்ல வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
எனக்காக என் நண்பர்கள் செய்த உதவி: லோகேஷ் கனகராஜ்
தை மாதம் நெருங்குது… தங்கம் விலை எகிறுது!