வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுடன் இன்று (நவம்பர் 4) ஆலோசனை மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 21-ஆம் தேதி துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்தசூழலில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மின்சாரத்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் தங்கம் தென்னரசு பல முக்கிய ஆணைகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து 24 மணி நேரமும் உதவி பொறியாளர்களை நியமிக்க வேண்டும்
44 மின் பகிர்மான வட்டங்களில் உள்ள மேற்பார்வை பொறியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும்
மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும்.
மின்தடைகள் ஏற்படுகின்ற பட்சத்தில் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…