நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கருக்கு வந்த போன்… அடுத்து நடந்தது என்ன?

Published On:

| By Kavi

பேருந்தில் லேப்டாப்பை தவறவிட்ட இளைஞருக்கு அதை மீட்டு கொடுக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உதவியுள்ளார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இரண்டு, மூன்று தினங்களுக்கு பின் நேற்று போக்குவரத்து சீரானது.

இந்தநிலையில் நேற்று (டிசம்பர் 5) இரவு 8.15 மணிக்கு சிதம்பரத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று சென்னை செல்வதற்காக புறப்பட்டது. இந்த பேருந்தில் ஏறிய இளைஞர் சந்துரு கடலூர் செல்ல டிக்கெட் எடுத்தார்.

தான் கொண்டு வந்த லேப்டாப் பேக்கை, இருக்கைக்கு மேல் உள்ள ஸ்லாட்டில் வைத்துவிட்டு வலதுபக்க கடைசி இருக்கையில் அமர்ந்தார்.

தூங்கிக் கொண்டே பயணித்த சந்துரு, கடலூர் பேருந்து நிலையம் வந்ததும் தூக்க கலக்கத்தில் தான் கொண்டு வந்த லேப் டாப் பேக்கை மறந்துவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்றுவிட்டார்.

வீட்டிற்கு போய் சேர்ந்த பிறகு, குடும்பத்தினர், ‘ போகும்போது கொண்டு போன லேப்டாப் எங்கே’ என்று கேட்ட பிறகுதான் சந்துருவுக்கு பேருந்தில் லேப் டாப்பை வைத்துவிட்டு வந்துவிட்டதே ஞாபகம் வந்தது.

இந்தநிலையில் உடனடியாக புதுச்சேரியில் உள்ள தனது நண்பர்களுக்கு தொடர்பு கொண்டார். அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, பேருந்தின் அடையாளத்தையும் சொல்லி, பஸ் புதுச்சேரி வந்ததும், அதில் ஏறி பையை எடுத்து வைங்க’ என்று சொல்லியிருக்கிறார். பயணச் சீட்டில் இருந்த பேருந்து எண்ணையும் (TN 32 N 4674) கொடுத்திருக்கிறார்.

அதன்படி, அவரது நண்பர்களும் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.

ஆனால் அந்த எண் கொண்ட பேருந்து வரவில்லை. நீண்ட நேரம் நின்றும் பேருந்து வரவில்லை என்ற தகவலை சந்துருவிடம் அவரது நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தசூழலில் தான், தனது டிக்கெட்டில் இருந்த (TN 32 N 4674) பதிவெண் வேறு. ஆனால் தான் பயணித்த பேருந்தின் பதிவெண் வேறு என்பது சந்துருவுக்கு தெரியவந்திருக்கிறது. மழை காலம் காரணமாக வேறொரு பதிவெண் கொண்ட பேருந்தில்(ஸ்பேர் பஸ்) பயணித்தது சந்துருவுக்கு தெரியவந்திருக்கிறது.

என்ன செய்வது என்று தெரியாமல்… தனது நண்பர் ஒருவர் மூலம் நள்ளிரவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை, தொடர்புகொண்டிருக்கிறார் சந்துரு.

‘அந்த லேப்டாப்பில் எனது வேலை சம்பந்தமான முக்கிய தகவல்கள் இருக்கிறது, வாழ்வே அதில்தான் இருக்கிறது. தூக்கத்தில் மறந்துவிட்டு பேருந்தில் இருந்து இறங்கிவிட்டேன். என் தப்புதான்… எப்படியாவது அதை கண்டுபிடிச்சுக் கொடுங்க சார்” என்று உருக்கமாக கோரிக்கை வைத்திருக்கிறார் இளைஞர் சந்துரு.

உடனே அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறை மேலாளரை தொடர்புகொண்டு, “கடலூரில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பேருந்தில் இளைஞர் ஒருவர் லேப்டாப்பை தவறவிட்டுவிட்டார். அது எந்த பேருந்து என்று விசாரித்து லேப்டாப் பையை பத்திரமாக எடுத்து வைக்க சொல்லுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து சந்துரு பயணித்த பேருந்து எது? அதில் யார் கண்டக்டர்? என்று விசாரித்து 20 நிமிடத்தில் லேப் டாப் பேக் கிடைத்துவிட்டது என்று அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அந்த பேக்கை கடலூர் வழியாக செல்லும் பேருந்தில் கொடுத்து அனுப்பி, இளைஞரிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று அமைச்சர் கூற, அதன்படி இன்று காலை 7 மணிக்கு கடலூர் சென்ற பேருந்தில் லேப் டாப் எடுத்துச் செல்லப்பட்டு இளைஞர் சந்துருவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து சந்துரு அமைச்சர் சிவசங்கருக்கும், தனக்கு உதவிய போக்குவரத்து ஊழியர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

வணங்காமுடி

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி இருக்கையில் கட்டுக்கட்டாக பணம்!

அதானியை ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை, ஒப்பந்தமும் போடவில்லை – செந்தில் பாலாஜி விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel