இயற்கை எரிவாயுவில் இயங்கும் ஆறு அரசு பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜூன் 13) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,160 டீசல் பேருந்துகள் மூலம், தினசரி சுமார் 1.76 கோடி பொது மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். போக்குவரத்துக் கழகங்களின் மொத்த செலவில் சுமார் 27% டீசலுக்காக செலவிடப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசின் நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023-ஐ பரிந்துரைத்துள்ளது.
அதன் அடிப்படையில், குறைந்த கார்பன் உமிழ்வு, அதிகப்படியான கிலோமீட்டர், டீசலைவிட 7% முதல் 20% வரை செலவு குறைந்த, சுற்றுச் சூழலுக்கு உகந்த, சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மற்றும் திரவ நிலை இயற்கை எரிவாயு (LNG) பேருந்துகளை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பரிட்சார்த்த அடிப்படையில் இயக்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, 7 போக்குவரத்து கழகங்களில் தலா இரண்டு பேருந்துகளில் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) பயன்படுத்தி என்ஜினில் மறுசீரமைப்பு செய்து, மொத்தம் 14 பேருந்துகளை இயக்கவும், மேலும் மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் விழுப்புரம் போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகளில், திரவ நிலை இயற்கை எரிவாயு (LNG) பயன்படுத்தி மறுசீரமைப்பு செய்து, மொத்தம் 4 பேருந்துகளை இயக்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில், முதல் கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 4 திரவ நிலை இயற்கை எரிவாயு (LNG) பேருந்துகள் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 2 சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) பேருந்துகள் என மொத்தமாக 6 பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 49 வாரிசுதாரர்களுக்கு (ஒரு ஓட்டுநர் மற்றும் 48 நடத்துநர்களுக்கு) கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
ஏற்கனவே, 57 வாரிசுதாரர்களுக்கு 8 ஓட்டுநர், 48 நடத்துநர் மற்றும் ஒரு நிர்வாகப் பணியாளர் நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, தற்போது வரை மொத்தமாக 106 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IND vs USA: சிவம் துபே செய்த செயல்: அப்செட்டான ரோஹித் – என்ன ஆச்சு தெரியுமா?
பாடல்களுக்கு இளையராஜா உரிமம் கோர முடியாது – எக்கோ நிறுவனம்!