ஒன்றிய அரசு டீசல் விலையை, மூன்று ஆண்டுகளுக்குள் மூன்று மடங்கு உயர்த்திய நிலையிலும், பொதுமக்களுக்கான சேவை பாதித்து விடக்கூடாது என்பதனால் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளையொட்டி, ஆம்னி பேருந்துகள் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக, புகார்கள் வந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை எழிலகத்தில் இன்று (செப்டம்பர் 27) ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், விழாக்காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில்,
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகார் வராத அளவிற்கு, பேருந்து கட்டணங்களை உரிய முறையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.
தமிழகத்தை பொறுத்தவரை பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், மக்களுக்கான சேவையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
ஒன்றிய அரசு டீசல் விலையை நிர்ணயத்திற்குள் இல்லாமல், மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு விலையை உயர்த்தியுள்ள நிலையிலும், பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவை பாதித்து விடக்கூடாது என்பதால் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை.
ஆனால், தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை, அவர்கள் தொழிலாக செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதால், அதில் உள்ள பிரச்சனைகளை எங்களிடம் சொன்னார்கள். .ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சேவை செய்யவில்லை.
எனவே, அரசு பேருந்து கட்டணத்தை, தனியார் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிடுவது தவறான ஒரு கண்ணோட்டம்.
தனியார் பேருந்து கட்டணம் அதிகம் என்று தெரிந்துதான் மக்கள் புக் செய்கிறார்கள். அவர்கள் புகாரும் செய்யவில்லை. தனியார் பேருந்துகளின் கட்டணம் ஏழை மக்களை பாதிக்கவில்லை. அவர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்கிறார்கள்
தனியார் ஆம்னி பேருந்து தொழில் பாதிக்கப்படாத வகையிலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், ஒவ்வொரு முறையும் ஒரு கட்டணம் என்ற சூழல் ஏற்படாமலும்,
பேருந்து கட்டணத்தை கட்டுக்குள் அமைத்து ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, ஆலோசனைகள் வழங்கியுள்ளோம்.
எனவே, இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுடன், அவர்கள் ஆலோசனை செய்து, ஒரு தீர்வை கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
விழாக்காலங்களில் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
செல்வம்
சோனியா அப்செட் : காங்கிரஸ் தலைவர் ரேஸில் இருந்து விலகுகிறாரா கெலாட் ?
மீண்டும் பிஎஃப்ஐ தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!