MTC Buses from kilambakkam to Koimbadu

கிளாம்பாக்கம் டூ கோயம்பேடு : 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து!

தமிழகம்

கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30) திறந்து வைத்தார்.

இந்தநிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், “ அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தெற்கு பகுதிக்கு செல்லும். பெங்களூர், கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும்.

அதேபோல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவில் கோயம்பேட்டிற்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தான் வரும். கோயம்பேட்டிற்கு செல்லாது.

எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும்.

சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.

அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் டிசம்பர் 31-ஆம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும்.

ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற பேருந்துகளை தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து (கிளாம்பாக்கம்) 270 நடைகள் இயக்கப்படும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லும்.

அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும். இங்கிருந்து (கிளாம்பாக்கம்) கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும்.

ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கூடுதலாக 1691 நடை பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. எனவே, மொத்தம் 4077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்திலே இயக்கப்படும்.

அதேபோல, இந்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அல்லாத மற்ற ஆறு போக்குவரத்து கழகங்கள் – விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில் இயங்கும். பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும்.

பொங்கலுக்கு பிறகு அந்த அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். 1140 புறப்பாடுகள் பொங்கல் வரை கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும்.

அதேபோல ஆம்னி பேருந்துகள் இன்றைக்கு கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தங்களுடைய செயல்பாட்டினை தொடங்கிவிட்டார்கள். ஏற்கனவே அவர்களுக்கு டிக்கெட் புக்கிங் ஆகியுள்ளதால், பொங்கல் வரை சென்னை நகரத்தில் இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு முழுமையாக ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.

எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை நாளையிலிருந்தே முழுமையான செயல்பாடு இங்கிருந்து தொடங்கும். மாநகர போக்குவரத்து கழகம் நாளை காலையிலிருந்து இங்கிருந்து சென்னை மாநகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

அரசு போக்குவரத்து கழகத்தின் மற்ற ஆறு போக்குவரத்து கழகங்கள் பொங்கல் வரை கிளாம்பாக்கம் வழியாக செல்பவை. பொங்கலுக்கு பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். அதேபோல ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து முழுமையாக இயக்கப்படும்” என்று சிவசங்கர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

புத்தாண்டு கொண்டாட்டம் : போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் சென்னை!

ஆளுநர் – முதல்வர் சந்திப்பில் நடந்தது என்ன? – அமைச்சர் ரகுபதி பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *