திருவண்ணாமலை மகா தீபத்தை ஒட்டி பக்தர்கள் யாரும் மலை ஏற அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (டிசம்பர் 11) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி துணை முதல்வர் உதயநிதி கிரிவல பாதையை ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் சென்று மூன்று முறை திருவண்ணாமலையில் கள ஆய்வு செய்தோம். பின்னர் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு கூட்டம் நடத்தினோம்.
திருவண்ணாமலையில் பரணி தீபத்திற்கு 6,300 பேர், மகாதீபத்திற்கு 11,600 பேர் என மொத்தம் 17,900 பேரை மலை ஏற அனுமதிப்பதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வந்தன.
இந்தநிலையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் ஆணையர் சரவணராஜ் தலைமையில் 8 பேர் கொண்ட குழு டிசம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையில், அதிகமான மனிதர்களை மலையில் ஏற்றக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த முறை பக்தர்கள் யாரும் மலையில் ஏற அனுமதி இல்லை. அதற்கான முறையான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பார்.
மலையின் உச்சிக்கு 3,050 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. பொருட்களை எடுத்து செல்பவர்கள், காவலர்கள், வனத்துறையினர் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாரதியார் பிறந்த நாள்… மோடி முதல் ஸ்டாலின் வரை… குவியும் வாழ்த்து!