கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலையில் உணவகங்கள் அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (பிப்ரவரி 5) தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெகு விரைவில் மலிவு விலையில் உணவகம் அமைக்கப்படும். கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கடை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போது கழிப்பிடம், குடிநீர், கடைகள் வசதி இல்லை என புகார்கள் எழுந்தது. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 35 நாட்களுக்குள் பயணிகளின் 90 சதவிகித அடிப்படை வசதிகளை நிறைவேற்றியுள்ளோம்.
பயணிகளின் நலன் கருதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரூ.20 கோடி செலவில் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல நடைமேம்பாலம் அமைக்க ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போக்குவரத்து நெரிசலை சீரமைக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு வருகிறோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் தொடங்கும் போது இந்த பணிகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்தவுடன் தான் இந்த பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. பயணிகளுக்கு இன்னும் தேவை இருந்தால், அதனையும் நிறைவேற்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”அவரே பாராட்டிட்டாரு” மகிழ்ச்சியில் திளைக்கும் ‘லவ்வர்’ மணிகண்டன்
சவரனுக்கு ரூ.160 அதிரடியாக குறைந்த தங்கம் விலை!