அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிற பக்தர்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றால் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்று அதற்கான உதவிகள் செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் 108 மாணவ மாணவியர் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரங்களை நேற்று பாராயணம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிற பக்தர்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றால் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்று அதற்கான உதவிகள் செய்யப்படும்.
திமுக ஆட்சியில் கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 17 கோவில்களுக்கும், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 8 கோவில்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளோம்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று 17 கோவில்களில் 108 சுமங்கலி பெண்கள் பங்குபெறுகின்ற சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
மகாசிவராத்திரி பெருவிழா முதலில் மயிலாப்பூரிலும் கடந்த ஆண்டு ஐந்து திருக்கோவில்களிலும் நடைபெற்றது. இந்த ஆண்டு கூடுதலாக இரண்டு கோவில்கள் என மொத்தம் 7 கோவில்களில் மகாசிவராத்திரி பெருவிழா நடைபெறும்” என்று தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 22-ஆம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து அயோத்தி கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல பக்தர்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றால் உதவிகள் செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
டான்செட், சீட்டா தேர்வுகள்: அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு!