சென்னையில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 24 வரை நவராத்திரி விழா நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரி கொண்டாட்டத்தின் போது துர்கா தேவியின் 9 வடிவங்களை வழிபடுவது வழக்கம். வீடுகள் மற்றும் கோவில்களில் கொலு வைத்து சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் நவராத்திரி விழா நடைபெறும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
”உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்தாண்டு திருக்கோயில்கள் சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் அக்டோபர் 15 முதல் 24ஆம் தேதி வரை 10 நாள்கள் கொண்டாடப்படவுள்ளது.
ஒவ்வொரு நாள் நிகழ்வின் போதும் மாலை சிறப்பு வழிபாடும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக அக்டோபர் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மாணவ, மாணவிகள் பங்குபெறும் சகலகலா வல்லி மாலை பூஜையுடன் தொடங்கி, இரவு 7 மணிக்கு மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா ஆகியோரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
திருக்கோயில்கள் சார்பில் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழாவின் நிகழ்ச்சிகளில் சமய சான்றோர்கள், ஆன்மிகவாதிகள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நவராத்திரி கொலு மற்றும் கலை நிகழ்ச்சிகளை காண்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
வக்பு வாரியத்தில் ரூ.2000 கோடி ஊழலா? – அப்துல் ரகுமான் விளக்கம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ட்வீட்: பாஜக தலைவர்கள் பரபரப்பு கருத்து!