பொறியியல் படிப்பில் ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகளையே மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 1,48,811 இடங்களுக்கான கலந்தாய்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. முதலில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்புப் பிரிவுக்காக கலந்தாய்வு நடந்தது.
இதையடுத்து பொதுப்பிரிவு கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 10 ஆம் தேதியும், இரண்டாவது சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25 ஆம் தேதி தொடங்கியது.
முதல்கட்ட கலந்தாய்வில் 10,351 மாணவர்களும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 23,458 மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று(அக்டோபர் 11) உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து கலந்தாய்வு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வில் 2124 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
2வது கட்ட கலந்தாய்வில் 231 பேர் சேர்ந்துள்ளனர். 2360 இடத்தில் ஏறக்குறைய 90 சதவீதம் பேர் சேர்ந்துவிட்டார்கள். எஞ்சிய இடங்களில் உள்ளவர்கள் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது.
அப்படி சென்றால் அந்த காலியிடங்களையும் நிரப்புவதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்யும். கண்டிப்பாக இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடம் என்பதே இருக்காது.
பொறியியல் படிப்புகளுக்கான 3 ஆவது கவுன்சிலிங் 13 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அந்த கவுன்சிலங்கில் 49,043 பேர் கலந்து கொள்வார்கள். இறுதியாக 4 ஆவது சுற்றில் 61, 657 பேர் கலந்து கொள்வார்கள்.
பி.ஆர்க் படிப்பில் சேருவதற்கு ஒரே கட்டமாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. இன்னும் கூட ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் நடக்க வேண்டி இருக்கிறது.
கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பை அரசு வழங்கும்.
முதலமைச்சர் அறிவித்த நான் முதல்வன் திட்டத்தின் மூலமாகவும், தொழில் நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு பொறியியல் பல்கலைக்கழகங்கள் பணியாற்றவேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுரைக்கு ஏற்பவும் இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் கம்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் அதிகம் சேர்ந்திருக்கின்றனர். மைனிங், பிரிண்டிங் போன்ற பாடப்பிரிவுகளில் குறைந்த அளவு மாணவர்களே சேர்ந்துள்ளனர்” என்றார்.
கலை.ரா
முதல்வரின் தமிழ்மொழி கரிசனம் – அழுவதா? சிரிப்பதா?: அண்ணாமலை விமர்சனம்!
ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்!