“500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை” – பெரியகருப்பன்

Published On:

| By Selvam

minister periyakaruppan says ration shop tomato

தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 31) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “தக்காளி விலை சமீபகாலமாக உயர்ந்து வருவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் 67 பண்ணை பசுமை கடைகள், 111 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து 300 நியாய விலை கடைகளாக அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பிற மாநிலங்களிலும் தக்காளி விலை உயர்ந்த போதிலும் அங்குள்ள மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை

தக்காளியை பொறுத்தவரை உற்பத்தி குறைவாக உள்ளதாலும் தேவை அதிகமாக உள்ளதுமே விலை உயர்வுக்கு காரணம். தக்காளி பதுக்கல் மற்றும் செயற்கை தட்டுப்பாடு ஏற்படவில்லை.

பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் முதலமைச்சரின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும். மாவட்டம் தோறும் 10 நியாய விலைக் கடைகளில் என சராசரியாக ஒவ்வொரு கடைகளில் 50 கிலோ தக்காளி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் உற்பத்தியை அதிகரிக்கவும் வேளாண் துறை, உணவு துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

காஞ்சிபுரத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை: 6000 பேருக்கு வேலைவாய்ப்பு!

டி.கே.சிவக்குமார் மீதான சிபிஐ வழக்கு : உச்ச நீதிமன்றம் மறுப்பு!