மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக வங்கி கணக்கு தொடங்குவதற்கு 2 கட்டங்களாக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 19) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெகநாதன், பதிவாளர் சுப்பையன் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு அதிகாரிகள் காணொளி வயிலாக கலந்துகொண்டனர்.
இதில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தை எவ்வாறு பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கூடுதல் பதிவாளர் தலைமையில் 3 மாவட்டங்களுக்கு ஒரு கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன்,
“மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த பல்வேறு துறைகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூட்டுறவு துறை சார்பாக அனைத்து நியாய விலை கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிமை தொகை விண்ணப்பத்தை வீடுகளில் கொண்டு சேர்க்கும் பணி முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது .
இதில் ஜூலை 23 வரை தமிழகத்தில் உள்ள 2.24 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விண்ணப்பம் வழங்கப்படும். ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை முதல்கட்ட முகாமும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்பட உள்ளது.
முகாம்களில் வங்கி கணக்கு துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21 லட்சம் பயனாளிகளுக்கு வங்கி கணக்கு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஒரு லட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் புதிய கணக்குகள் துவங்கி உள்ளனர். மேலும் 15 லட்சம் பேர் கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
இதனையடுத்து பேசிய கூட்டுறவு துறை செயலாளர் ஜெகநாதன், “முகாமிற்கு தேவையான பையோமெட்ரிக் கருவிகள், செல்போன் இதர உபகரணங்களும் தயார் நிலையில் இருக்கிறது. இத்திட்டம் தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் மின் கட்டண ரசீது கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தில் மின் இணைப்பு எண்ணை மட்டும் பூர்த்தி செய்தால் போதும். மின் கட்டண ரசீது தேவையில்லை.
முகாமில் விண்ணப்பிக்கும் போது கைரேகை பதிவு செய்ய முடியவில்லை என அச்சம்கொள்ள தேவையில்லை. இதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
ED ரெய்டுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை: மு.க.ஸ்டாலின்
“தமிழக அரசுக்கு அதிகாரமில்லை” : ஆன்லைன் கேம் வழக்கில் மத்திய அரசு!