கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்!

Published On:

| By christopher

செந்தில் பாலாஜிக்கு பதிலாக அவர் வகித்து வந்த கோவை மாவட்ட வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சர் பதவிக்கு முத்துசாமி இன்று (ஜூலை 6) நியமனம் செய்யப்பட்டுள்ளார்,

மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை விரைவுப்படுத்தவும், நலத்திட்டப் பணிகளை கண்காணித்து விரைந்து செயல்படுத்தவும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பொறுப்பு அமைச்சர்கள் உள்ளனர்.

அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா இன்று உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக செந்தில் பாலாஜி வகித்துவந்த இலாகாக்கள் பிற அமைச்சர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி மதுவிலக்கு  ஆயத்தீர்வை துறை அமைச்சராக முத்துசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து தற்போது செந்தில்பாலாஜி வகித்துவந்த கோவை வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சர் பதவியும் முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செந்தில் பாலாஜியின் 2 வருடங்கள்: ஷாக் அடிக்கும் மின் வாரிய ஊழல்!

ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! தேனிக்கு இடைத் தேர்தலா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share