கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்துக்கு உதவி! விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு?

Published On:

| By Prakash

“எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்கும் வகையில், காப்பீட்டுத் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும்” என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த புறங்கணி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் விமல்ராஜ் ஜூலை 25ஆம் தேதி, கபடி விளையாட்டின்போது எதிர்பாராதவிதமாக களத்திலேயே உயிரிழந்தார்.

அவரின் உயிரிழப்பு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கபடி வீரர் விமல்ராஜ் வீட்டுக்குச் சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

அத்துடன், முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதி 3 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். தன் சொந்த நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் காசோலையையும் வழங்கினார்.

இந்த நிகழ்வுக்குப் பின் பேசிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், “விமல்ராஜ் தேசிய அளவில் சாதனை படைத்த கபடி வீரர். அவருடைய இழப்பு என்பது தமிழக விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு.

விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற மரணங்கள் நிகழாதவண்ணம் அதைத் தடுக்கும் வகையில், மருத்துவக் குழுக்களைக் கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து வீரர்கள் களமிறக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்கும் வகையில், காப்பீட்டுத் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.

இந்த நிகழ்வில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜெ.பிரகாஷ்

இந்த ஆண்டில் இரு பெரிய மாநாடு: மு.க.ஸ்டாலின் திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share