மருத்துவர் பாலாஜிக்கு கத்திக்குத்து: “டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்” – மா.சுப்பிரமணியன்
மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவ சங்கத்தினர் அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்ட்த்தை வாபஸ் பெற்றுள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவம்பர் 13) தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று மருத்துவ சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் கத்தியால் குத்தினார். இதில் ஏழு இடங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவல் பணியாளர்கள் அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலுக்குள்ளான பாலாஜி, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமுடன் இருக்கிறார். சிறிது நேரத்திற்கு முன்பாக வீடியோ காலில் அவரிடம் பேசினேன். டாக்டர் பாலாஜி சிறப்பான மருத்துவர்.
கிண்டி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிறப்பான மருத்துவ சேவையை தந்தவர். விக்னேஷின் தாயார் காஞ்சனா கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். 6 முதல் 7 முறை அவருக்கு ஹூமோ சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. தனது தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் தாக்கியுள்ளார்.
மருத்துவத்தில் குறைபாடு என்று போலியான காரணத்தைச் சொல்லி தாக்குதல் நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசு மருத்துவர்கள் வேண்டுமென்றே தவறிழைக்க மாட்டார்கள்.
இந்த சம்பவம் நடைபெற்ற உடன் ஒருசில மருத்துவ சங்கங்களின் சார்பில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தார்கள். அவர்களுடன் நானும் துறையின் செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இந்த பேச்சுவார்த்தையின் போது மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும், நோயாளிகளுடன் வரும் அட்டண்டர்ஸ் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதற்கு தமிழக அரசு சார்பில் உறுதி அளித்திருக்கிறோம். இதனையடுத்து மருத்துவ சங்கத்தினர் தாங்கள் அறிவித்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோல்டன் ஹவரை தாண்டியிருந்தால்… டாக்டர் பாலாஜி உடல்நிலை – மருத்துவர்கள் சொல்வது என்ன?
எம்.எல்.ஏ-வை மிரட்டிய 17 வழக்குகளில் தேடப்படும் ரவுடி கைது!