சென்னை அசோக் நகர் சிவன் பார்க் அருகே மழைநீர் தேங்காதவாறு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இன்று (நவம்பர் 2) காலை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பி.டி.ராஜன் சாலை, ராமசாமி சாலை, ராஜமன்னார் சாலை, ஜி.என்.செட்டி சாலை, சீதாம்மாள் காலனி, தியாகராய நகர் பகுதிகளில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் மழை நீர் தேங்கியது.
இப்பொழுது எந்த இடத்திலும் அதிக மழை பாதிப்பு இல்லை. சென்னையைப் பொறுத்தவரை 16 சுரங்கப்பாதை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
கடந்த ஆண்டு மழைப்பொழிவில் 16 சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் தேங்கியது. 10-க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகளில் இரண்டு நாட்கள் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
இந்த வருடம் சுரங்கப்பாதைகளில் ஏற்பட்ட மழை நீரை மோட்டார் பம்புகள் மூலம் அகற்றியதால் இரண்டு சுரங்கப்பாதைகளில் மட்டுமே போக்குவரத்து தடைபட்டுள்ளது.
வட சென்னை கணேசபுரம் சுரங்கப்பாதையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது.
மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
தியாகராய நகரைப் பொறுத்தவரை, ரங்கராஜபுரம் அருகில் ரயில்வே பாலத்தின் கீழே இரு சக்கர வாகனங்கள் செல்லக்கூடிய சிறிய சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. அந்த சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
கடந்த ஆண்டு சோழிங்கநல்லூர் பகுதியில் மிகப்பெரிய அளவில் மழை பாதிப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டில் இருக்கிற 40-க்கும் மேற்பட்ட சிறு ஏரிகள் மற்றும் குளங்களிலிருந்து உபரியாக வருகிற நீர் சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதிகளை கடந்து ஒக்கியம் ஓடை வழியாக கடலில் கலக்கிற ஓர் சூழல் இருந்தது. அந்த பாதிப்பும் இன்று முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.
சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி போன்ற பகுதி குடியிருப்புகளில் மழை நீர் சூழவில்லை.
சென்னையில் 30 செ.மீ அளவுக்கான மழை பெய்திருந்தாலும் கூட பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
திகட்ட திகட்ட பாடலில் நா.முத்துக்குமாரின் திகட்டாத வரிகள்!
வேலைவாய்ப்பு : திருச்சி என்.ஐ.டி.யில் பணி!