ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் ஜெயந்தின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று (மார்ச் 18) அஞ்சலி செலுத்தினார்.
மார்ச் 16-ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டபோது கடுமையான பனி மூட்டத்தின் காரணமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானி லெப்டினண்ட் கர்னல் ரெட்டி, துணை விமானி மேஜர் ஜெயந்த் உயிரிழந்தனர்.
இதில் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்தின் உடல் திசாப்பூரில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது. மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஜெயமங்கலத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது.
தேனி மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் ராணுவ வீரர் உடல் தேசிய கொடி போர்த்தி பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெயந்தின் உடலுக்கு கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் சஜிவனா, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ மரியாதையுடன் ஜெயமங்கலத்தில் உள்ள மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
செல்வம்
இந்தியா, ஆஸ்திரேலியா கிரிக்கெட்: டிக்கெட் வாங்க திரண்ட ரசிகர்கள்!